எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அரவிந்த்தும் (ஹரி கிருஷ்ணன்), தாய், தந்தையை இழந்த சாதுவான பெண்ணான பூரணியும் (லியோமோல் ஜோஸ்) திருமணத்திற்குப் பிறகு சென்னையிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகிறார்கள். காதல், ஊடல், கூடல் என இவர்களின் வாழ்க்கை நகரும்போது, அரவிந்த் தன் முன்னாள் காதலி அன்னாவுடன் (லாஸ்லியா) தனியாக ஒரு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்ற உண்மை பூரணிக்குத் தெரிய வருகிறது. அதைப் பூரணி எப்படி எதிர்கொள்கிறார், அதன் பின்விளைவுகள் என்ன, இந்த உறவில் அன்னாவின் இடம் என்ன என்பதை இருக்கை நுனி த்ரில்லராக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.

கணவனோடு காதலில் உருகுவது, தேவைப்படும் இடங்களில் வெகுண்டெழுவது, மர்மத்தைத் தனக்குள் புதைத்து வைத்துக்கொண்டு, அதை வெளிக்காட்டாத முகபாவனையில் நடமாடுவது, தேவையான இடங்களில் மட்டும் அதை நுணுக்கமாக வெளிப்படுத்துவது எனப் படம் முழுவதுமே அடர்த்தியோடும் வீரியத்தோடும் உலாவும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகிறார் லிஜோமோல் ஜோஸ். இரண்டாம் பாதியில் வரும் தன் கனமான கதாபாத்திரத்திற்கு ஓரளவிற்கு நியாயம் செய்திருக்கிறார் லாஸ்லியா. முக்கியமாக, எமோஷனலான தருணங்களில் உயிர்ப்புடன் திரையில் தெரிய முயற்சிகள் எடுத்திருக்கிறார். ஹரி கிருஷ்ணன் நடிப்பில் குறைகளில்லை. காவலராக வரும் ராஜிவ் காந்தியின் நடிப்பில் புதுமுக நடிகருக்கான பதற்றம் இருந்தாலும், அக்கதாபாத்திரம் எழுதப்பட்ட விதத்தால் கவனிக்க வைக்கிறார். இவர்கள் தவிர சுதேஷ், தாரணி ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
வீடு, அறை, கார், அடுக்குமாடிக் குடியிருப்பு எனச் சுற்றிய இடத்திலேயே கேமரா சுழன்றாலும், நுணுக்கமான ப்ரேம்களாலும் கோணங்களாலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ச.காத்தவராயன். லிஜோமோல் கதாபாத்திரம் உண்மையை மறைக்கத் தொடங்கியவுடன் அவரின் அபார்ட்மென்ட்டிலும் இருள் படர்வது தொடங்கி ஒளிகளும், நிறங்களும் கதாபாத்திரங்களின் மனநிலையையும், காட்சிகளையும் ஆழமாக்க உதவியிருக்கின்றன. ‘ஸ்லோபேர்ன்’ த்ரில்லருக்குத் தேவையான வேகத்தை தன் கட்களில் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் இளையராஜா சேகர். கோவிந்த் வசந்தா இசையில், யுகபாரதி வரிகளில், ரேஸ்மி சதீஷின் குரலில் ‘சுளுந்தீ’ பாடல், கதையின் கருவைப் பேசுகிறது. வசனங்களால் கடத்த முடியாத கதாபாத்திரங்களின் அகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டி, திரைக்கதையின் வீரியத்தைக் கூட்டியிருக்கிறது அதே கோவிந்த் வசந்தாவின் அட்டகாசமான பின்னணி இசை!

ஒரு த்ரில்லர் டிராமாவை எமோஷனோடு அணுகி, ஆங்காங்கே அவல நகைச்சுவைகளைத் தூவி, கதாபாத்திரங்களின் செயலை விவாதிக்க அழைக்கிறார் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.
அரவிந்த் மற்றும் பூரணியின் குணங்களும் பின்னணியும், இருவருக்குமிடையிலான அந்நியோன்னியமும் சற்றே ‘நீளமாகககக’ விளக்கப்பட்டாலும், அதன் வழியே பின்பாதியில் வரும் கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லியிருப்பது தேர்ந்த எழுத்துக்கான சாட்சி! ஒருவழியாக, ஒரு பிரதான கதாபாத்திரத்தின் அதிரடி முடிவால், கதையை எட்டிப் பிடிக்கிறது படம். ஒரு ‘பகீர்’ மோடை அக்காட்சி கச்சிதமாக க்ளிக் செய்திருந்தாலும், அதற்கு நியாயம் செய்யும் காட்சிகள் அதற்கு முன் வைக்கப்படாதது சிறிது ஏமாற்றமே!
இரண்டாம் பாதி திரைக்கதை த்ரில்லர் பாதையா, எமோஷனலான பாதையா என டாஸ் போட்டு முடிவெடுக்கக் கொஞ்சம் நேரமெடுத்தாலும், அதற்குப் பிறகு, பரபரப்பையும், அழத்தத்தையும் ஒருசேரக் கொடுத்தபடியே பயணிக்கிறது திரைக்கதை. காரை பார்க்கிங் செய்யும் காட்சி, ‘லவ் யூ’ சொல்லும் காட்சி என முதற்பாதியில் விவரிக்கப்பட்ட காட்சிகள் இரண்டாம் பாதியில் முழுமையடைவது, அவற்றை நுணுக்கமாகத் திரைக்கதையில் இணைத்தது, காவல்துறைக்கும் பூரணிக்குமான உரையாடல் என ரசிக்கும்படியும், சுவாரஸ்யத்தைக் கூட்டும்படியும் நகர்கிறது திரைக்கதை. காவல்நிலைய காட்சிகள் உள்ளிட்ட சில காமெடி காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலைகளை எழுப்புவதோடு, த்ரில்லர் பாதைக்கும் எமோஷனல் பாதைக்கும் இடையிலான பாலமாக அமைந்து தேவையான ஆசுவாசத்தைக் கொடுக்கின்றன.

துரோகம், திருமணத்தை மீறிய உறவு, அவற்றால் குற்றவாளிகளாக்கப்பட்டுச் சுரண்டப்படும் பெண்கள், அவர்களின் முடிவைத் தீர்மானிக்கும் புறச்சூழல் என உறவுச் சிக்கல்களையும், உறவின் பெயரிலான சுரண்டல்களையும், சமூகச் சிக்கல்களையும் நேர்த்தியான வசனங்களால் உணர்வுபூர்வமாக விவாதித்திருக்கிறது யுகபாரதி மற்றும் ஜோஷ்வா சேதுராமனின் வசனக் கூட்டணி. அதேநேரம், வெகு சில இடங்களில் வசனங்களில் அதீத இலக்கியத்தன்மையும், பிரசார நெடியும் எட்டிப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
காவல்துறை இத்தனை மெத்தனமாக நடவடிக்கை எடுக்குமா, ஒரு சாதாரண கதாபாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய குற்றத்தைக் கச்சிதமாக மறைக்கிறது, அந்த மன தைரியமும், பக்குவமும் எப்படி வந்தது, படத்தில் ஒரு ஆண் கூட நல்லவராகவும், புத்திசாலியாகவும் இல்லையா என லாஜிக் ஓட்டைகளும் கேள்விகளும் ஆங்காங்கே தொந்தரவு செய்கின்றன. இறுதிக்காட்சித் தொகுப்பு யூகிக்கும்படி இருப்பதும், நம்பகத்தன்மை சிறிது சரிவதும் மைனஸ். அதோடு குற்றத்துக்கான ‘தண்டனை’ மரணம்தானா, அப்படியென்றால் அந்த ‘தண்டனை’யைக் கொடுத்தவருக்கு என்ன தண்டனை என அரசியல் சரிபார்ப்பு ரீதியான கேள்விகளும் தொக்கி நிற்கின்றன.
இருந்தபோதும் கச்சிதமான திரையாக்கத்தாலும், எழுப்பிய கேள்விகளாலும் கவனிக்க வைக்கிறார் இந்த ‘ஜென்டில்வுமன்’.