Symphony: 'சிம்பொனி என்றால் என்ன?' மொஸார்ட், பீத்தோவன்… இப்போ இளையராஜா!

‘இதுதான் சிம்பொனி…’ என்று சிம்பொனியை எளிதாகச் சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. சிம்பொனி இசையைக் காதலிப்பவர்களுக்கான பெரும் விருந்து. அதைக் கேட்டுத்தான் உணர முடியும். ஐம்பதிற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களின் இசைக் கருவிகளில் ஆழ்ந்த அமைதியுடன் அடர்ந்திருக்கும் சப்தங்கள் ஒவ்வொன்றாக விடுதலைப் பெற்று, இசைக்கோர்வையில் இணையும். அடர்வான அந்த இசை மெல்ல மெல்லமாக காற்றில் கலந்து வியாபித்து நம்மை ஆட்கொண்டு தன்வசப்படுத்திவிடும்.

ஒவ்வொரு இசையும் உயிரின் ஒவ்வொரு செல்லாகப் பயணித்து உணர்வின் நரம்புக்குள் அலைபாயும். அதற்குமேல் அதன் வசம் நம்மை ஒப்படைத்துவிட வேண்டியதுதான். இசையமைப்பாளரின் இசைக் குறிப்புக்கும், இசைக் கலைஞர்களை ஒருங்கிணைப்பவரின் கை அசைவிற்கும் கட்டுண்டு மெல்ல ஆரம்பித்து, வியாபித்து, ஓங்காரம் எடுத்து அடங்கும்.

நீண்ட நேரம், பல இசை அடுக்குகளுடன், ஐம்பதிற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களால் இசைக்கப்படும், பல இசைக்கருவிகளின் பெரும் இசைக்கோர்வை. காற்று, தோல், நரம்பு வாத்தியங்களின் இசைத் தொகுப்பு என்றுகூட சொல்லலாம்.

சிம்பொனி அரங்கேற்றம்

நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளின் இசையை உள்வாங்கி, கட்டுக்கோப்புடன் பிரதிபலிக்கும் கச்சிதமான உயரம், அகலத்துடன் அமைக்கப்பட்ட அரங்கிலேயே சிம்பொனி அரங்கேற்றும், ஒலிப்பதிவு செய்யப்படும். அதன் அரங்கேற்றமே கேட்பது மட்டுமின்றி, கண்பதற்கே அலாதியான அனுபவம்தான்.

எளிமையாக சொல்ல வேண்டும் எனில்,

சிம்ஃபொனிஎன்பது மேற்கத்திய க்ளாசிக்கல் இசை மரபில், பல்வேறு இசைக் கருவிகள் ஒன்றாக இசைக்கப்படும் ஓர் ஒத்திசைத் தொகுப்பு எனலாம்.

சிம்பொனியும், இசை ஆளுமைகளும்

ஐரோப்பிய மேற்கத்திய பராம்பரிய இசையான சிம்பொனி 1730 – 1820 காலக்கட்டத்தில் அறிமுகமாகிறது. பல இசைக் கருவிகளை ஒன்று சேர்த்து, நீண்ட, அடர்த்தியான அடுக்குகள் கொண்ட இசைக் கோர்வையாக அது ஆரம்பத்தில் உருவாகிறது. மெல்லிய இசையுடன் தொடங்கும் ‘சொனாட்டா (Sonata)’, மெதுவாக ஒருங்கிணைந்து இசைக்கோர்வையில் இணையும் ‘ஸ்லோ (Slow)’, சிம்பொனியின் மையத்தைத் தொடும் ‘டான்ஸ் ஃபார்ம் (scherzo)’ மற்றும் உச்ச நிலைக்குப்போய் அடங்கும் ‘சொனாட்டா – ரோண்டோ ஃபார்ம் (sonata-rondo form) என நான்கு பகுதிகளாக இசை இயக்கம் வரையறுக்கப்பட்டது. அதற்கெனப் பல விதிகளும் இருக்கிறது.

மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி | Mozart, Beethoven, Tchaikovsky

கற்றுத் தேர்ந்தபின், அதை உடைத்து புத்தாக்கம் செய்வதுதான் ஜாம்பவான்களுக்கு அழகு. ஜோசப் ஹெய்டன், மொஸார்ட், பீத்தோவன் என அடுத்தடுத்து வந்த இசை ஜாம்பவான்கள் சிம்பொனி வடிவத்தை மேம்படுத்தி இசைக்கோர்வைகளை ஆழமாகவும், அடர்த்தியாகவும், பெரும் உணர்ச்சிமிக்கதாகவும், புதுமைமிக்கதாகவும் மாற்றிக் கொண்டே வந்தனர். ஒவ்வொரு காலத்தின் இசை ஜாம்பவான்களும் சிம்பொனியில் தங்களின் இசை ஆளுமைகளை வெளிப்படுத்தி மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

மொஸார்ட், பீத்தோவன்…இப்போ இளையராஜா

இளையராஜாவுக்கு சிம்பொனி இசையை அரங்கேற்ற வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. 1986ம் ஆண்டு முதலே அதற்காக ஆயத்தமாகத் தொடங்கிவிட்டார். மேற்கத்திய இசையுடன் நம்ம இந்திய நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானிய இசையை ஒருங்கிணைத்து 1986ம் ஆண்டில் ‘ How to Name It?’, 1988 ஆம் ஆண்டில் ‘Nothing but Wind’ என நீண்ட நேர இசைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார்.

இளையராஜா

டாபெஸ்ட் சிம்ஃபொனி ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து 2005 ஆம் ஆண்டில் திருவாசகத்தை மேற்கத்திய இசைக் கருவிகளின் இசையோடு வெளியிட்டார். இப்படி தொடர்ந்து சிம்பொனியை அமைப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

சிம்பொனியை உருவாக்குவதில் இருக்கும் மிகப்பெரிய சவாலே நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்குத் தனித்தனியா இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுப்பதுதான். இசையை எழுதுவதில் கைதேர்ந்த, குண்டூசி சப்தத்தைக்கூட இசைக்குறிப்பாக உணரும் இளையராஜாவிற்கு அது கைவந்த கலைதான்.

இளையராஜாவின் இசைக்குறிப்புகள்

இப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் அப்பல்லோ அரங்கில் மார்ச் 8ம் தேதி ‘Valiant’ என்ற சிம்ஃபொனியை அரங்கேற்றவிருக்கிறார். மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் இப்போது இளையராஜாவும் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றுகிறார். இந்தியாவிலிருந்து தமிழர் ஒருவர் பண்ணைப்புரம் கிராடத்திலிருந்து கிளம்பி லண்டன் அப்பல்லோ அரங்கில் முதன்முதலாக சிம்பொனியை அரங்கேற்றுவது இளையராஜாதான் என்பது நாம் பெருமைகொள்ளும் தருணம்தான்.

கேட்டுப் பாருங்கள்…

பொறுமை, இசையின் மீதான காதல் இருந்தால் பல மணிநேரமானாலும் சிம்பொனியைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதன் அனுபவம் அலாதியானது. நேரமிருந்தால் இங்கே இருக்கும் சில சிம்பொனியைக் கேட்டுப் பாருங்கள்…

Kalinnikov – Symphony NO. 1 ‘G minor’

Joseph Haydn – Symphony No. 94 ‘Surprise’

Tchaikovsky – Symphony No.6 ‘ B minor’

Wolfgang Amadeus Mozart – Symphony No. 40 ‘G Minor’

Ludwig van Beethoven – Symphony No. 5, No.3 (Eroica)

Felix Mendelssohn – Symphony No. 4 ‘Italian’

Pyotr Ilyich Tchaikovsky – Symphony No. 6 ‘Pathétique’

இதோடு வெளிவரப்போகும் இளையராஜா – சிம்பொனி 01 ‘Valiant’யும் கேட்டுப்பாருங்கள்.

நீங்க அதிகமாகக் கேட்டு அனுபவித்த உங்களுக்குப் பிடித்த சிம்பொனியையும், உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளரையும் பற்றி கமெண்டில் சொல்லுங்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.