வேலூர்: திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு ‘அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்’ என்று அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் -08) தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் அமைச்சர்கள் கடனுதவி வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காட்பாடி வட்டம் ஜாப்ராபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 817 மகளிர் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி மதிப்பிலான நேரடி வங்கி கடனுதவிக் கான காசோலைகளை வழங்கினார். மேலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 5 மகளிர்க்கு ரூ.16.76 லட்சம் கடனுதவி, சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகையாக தலா ரூ.50 ஆயிரம், 2 கிராம் தங்கம் வீதம் மூன்று பேருக்கு ரூ.1.50 லட்சம் ரொக்கம், 6 கிராம் தங்கம் வழங்கினார்.
முன்னதாக, அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘ஒரு காலத்தில் ஆண் சமூகம் பெண்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தது. அதை தகர்த்தவர் தந்தை பெரியார். அவர்தான் சமூகத்தில் ஏன் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உரிமையை பெறக்கூடாது என கேள்வி எழுப்பியதுடன் அதனை போராடி பெற்றுத்தந்தார். பெண்களுக்கு கல்வி அவசியம் என பெரியார் போராடியதன் விளைவுதான் தமிழகத்தின் முதன்முதலில் பெண் மருத்துவராக முத்துலட்சுமி ரெட்டி ஆனார்.
பெரியார் வலியுறுத்திய பெண் கல்வியின் காரணமாக பெண்கள் இன்று உலக அளவிலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கு கல்வியில் சம உரிமை வழங்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு சொத்திலும் சமூக உரிமையை கருணாநிதி வழங்கினார். பெண்கள் அரசியலிலும் சம பங்குடன் இருக்க வேண்டும் என முதலில் அவர்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவீதத்தை வழங்கியவர் கருணாநிதி. அது தற்போது 50 சதவீதமாக உயர்ந்து வேலூர் மேயர் உள்பட தமிழகத்தில் 8 பெண்கள் மேயர்களாக உள்ளனர்.
திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மகளிர் குழுவினர் மூலம் அவர்களின் பொருளாதாரம் உயர்ந்தது. இடையில் 10 ஆண்டு காலம் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதி வெகுவாக குறைக்கப்பட்டன. தற்போது, திமுக ஆட்சியில் மீண்டும் மகளிர் குழுக்களுக்கு எண்ணற்ற கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த வங்கி கடனுதவிகளை பெறும் மகளிர் அனைவரும் நல்லமுறையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தபோது, திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டது குறித்த கேள்விக்கு, ‘அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்’ என்றார். தொடர்ந்து மேகேதாட்டு விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ‘தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்காமல் கர்நாடகா தலைகீழாக நின்றாலும் அணையை கட்ட முடியாது’ என்றார்.
முன்னதாக, “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” என சர்வதேச மகளிர் தின வாழ்த்தில் நடிகர் விஜய் கூறினார். அதன் விவரம்: “பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம்” – மகளிர் தின வாழ்த்தில் விஜய் ‘அரசியல்’