மும்பை,
மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சிரூர் தாலுகா பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நேற்று இரவு 11 மணியளவில் தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் ஆண் உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு நபர்கள், இளம்பெண்ணையும், அவரது ஆண் உறவினரையும் கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். அவர்கள் இருவரையும் பாலியல் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்திய அவர்கள், அந்த செயலை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த வீடியோவைக் காட்டி இளம்பெண்ணை மிரட்டி இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இன்று அதிகாலை அமோல் போட்டே(25) மற்றும் கிஷோர் காலே(29) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் வரும் 7-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.