புதுடெல்லி: உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (ஏஎம்யு) முதல்முறையாக ஹோலி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பல்கலைக்கழகமான ஏஎம்யுவில் முஸ்லிம்களின் அனைத்து நிகழ்வுகளும் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளில் ஈத் மிலன் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகையில், ஹோலி கொண்டாடவும் அனுமதி கோரி இந்து மாணவர்கள் சிலர் நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
இதற்கு நிர்வாகம், ஏற்கெனவே இந்து மாணவர்கள் வளாகத்தில் ஹோலி கொண்டாடுவதாகவும், இதற்காக என தனியாக அனுமதி அளித்து ஒரு புதிய பாரம்பரியத்தை தொடங்க விரும்பவில்லை என்றும் கூறி மறுத்து விட்டனர்.
இதை எதிர்த்து இந்துத்துவா அமைப்பான கர்ணி சேனாவினர் கடந்த 6-ம் தேதி ஏஎம்யு வாயிலில் போராட்டம் நடத்தினர். மார்ச் 10-ம் தேதி ஏஎம்யு வளாகத்தில் புகுந்து ஹோலி கொண்டாடுவோம் எனவும் அறிவித்தனர். இப்பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தி டெல்லிக்கு மனு அனுப்பினர்.
இவர்களுக்கு ஆதரவாக பாஜகவின் அலிகர் எம்.பி. சதீஷ் கவுதம், மாநிலங்களவை பாஜக எம்.பி. பிரிஜ் லால் உள்ளிட்டோரும் குரல் கொடுத்தனர். அலிகரின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. விவேக் பன்சல், அரசியல் லாபம் பெறுவதற்காக பாஜக ஹோலி கொண்டாட அனுமதி கேட்டு சர்ச்சையை கிளப்புவதாக கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில் அலிகர் பாஜக எம்.பி. சதீஷ் கவுதம், ‘’ஏஎம்யு வளாகத்தில் இந்து மாணவர்கள் ஹோலி கொண்டாடுவதை யாராலும் தடுக்க முடியாது. ஹோலி பண்டிகையை விரும்பிய இடத்தில் கொண்டாட யாரிடமும் அனுமதிபெறத் தேவையில்லை” என அறிவித்தார். இதனால், ஏஎம்யுவில் பதற்றமான சூழல் உருவாக தொடங்கியது.
இந்த நிலையில் ஏஎம்யு நிர்வாகம் நேற்று முதன்முறையாக ஹோலி கொண்டாட அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் ஏஎம்யுவின் என்ஆர்எஸ்சி அரங்கின் மண்டபம் ஹோலி கொண்டாட திறக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏஎம்யு நிர்வாகம் வேறுவழியின்றி முதல்முறையாக இந்த முடிவை எடுத்து இந்துத்துவா அமைப்பினருக்கு பணிந்திருப்பதாக கருதப்படுகிறது.
சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஏஎம்யு, சர் சையது அகமது கான் எனும் முஸ்லிம் தலைவரால் தொடங்கப்பட்டது. இதனால், ஏஎம்யுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறுபான்மை அந்தஸ்து நீதிமன்ற வழக்கால் ரத்தானது. இதன் மேல்முறையீட்டு மனுவின் விசாரணை முடிந்து அதன் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.