மதுரை: தேர்தல் நேரத்தில் ஆலோசகர் வைப்பது பிற கட்சிகளின் நிலைபாடாக இருக்கலாம். நாங்கள் மக்களை மட்டுமே நம்புவோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பாஜக உடன் கூட்டணி வைக்க பிற கட்சிகள் தவம் இருக்கின்றன என அண்ணாமலை பேசி இருக்கிறார். அது அவரது கருத்து. அதற்கு நான் பதில் கூறமுடியாது. தமிழகத்தில் மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மீனவர்கள் பிரச்சினை போன்ற முக்கிய பிரச்சினைகள் உள்ளன. தமிழகத்தில் தமிழ்தான் தாய்மொழி, உயிர்மொழி. தாய்மொழி தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கவேண்டும். அனைவரும் தமிழ் படிக்கவேண்டும். அதுவே எங்களின் நிலைப்பாடு. அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பது தான் விஜயகாந்த் வார்த்தை.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்திலுள்ள தொகுதிகளை குறைக்கும் கருத்துள்ளது. ஆனாலும், அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை. ஒருவேளை 40 தொகுதிகளை குறைக்கும் நிலை நேர்ந்தால் தமிழக அரசுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக போராடுவதில் உறுதியாக இருக்கிறோம்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரம் கடலை நம்பி தான் உள்ளது. தமிழக மீனவர் கைது நடவடிக்கையை மத்திய அரசு தடுக்கவேண்டும். பிரதமர் மோடி இலங்கை செல்வதாக அறிகிறேன். அவர் இலங்கை செல்லும் போது, தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இதுபோல், கச்சத்தீவையும் மீட்கவேண்டும். அதனை மீட்டெடுத்தால் மீனவர்களுக்கு பிரச்சினை இருக்காது. மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்.
தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய ஓராண்டு இருக்கிறது. அந்த காலம் வரும்போது கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். கட்சிக்கு ஆலோசகர் வைப்பது அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடு. ஆலோசகர் வைப்பதால் மட்டும் 100 சதவீதம் வெற்றி பெற்று விட முடியுமா? நாங்கள் மக்களை நம்பும் கட்சி” இவ்வாறு பிரேமலதா கூறினார்.
மாநிலங்களவை உறுப்பினர் விவகாரத்தில் அதிமுகவுடன் வருத்தம் உள்ளதா, நல்லுறவு தொடர்கிறதா என்ற கேள்விக்கு அந்த மாதிரி எதுவும் கிடையாது என பிரேமலதா பதிலளித்துவிட்டுச் சென்றார்.