டமாஸ்கஸ்,
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார்.
அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே, சிரியாவின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள லடாகியா, டர்டோஸ் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே கடந்த 2 தினங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப்படையினரின் சோதனைச்சாவடிகள், ராணுவ நிலைகள், ரோந்து வாகனங்களை குறிவைத்து அல் அசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்துவரும் மோதலில் இதுவரை ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 745 பேர் பொதுமக்கள், 125 பேர் பாதுகாப்புப்படையினர், 148 பேர் கிளர்ச்சியாளர்கள் என தெரியவந்துள்ளது. மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் கூடுதல் படைகளை சிரியா அரசு அனுப்பி வைத்துள்ளது.