சுந்தர்.சி – குஷ்பூ செலுத்திய நேர்த்திக்கடன்; குடும்பத்துடன் தரிசனம்; அன்னதானம் வழங்கி வழிபாடு

தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் முக்கியமானது மூன்றாம் படை வீடான பழநி. தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முருக பத்கர்கள் வந்து செல்கின்றனர். அதேபோல அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் முக்கிய விழாக்களில் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.  

பழநி முருகன் கோயில்
பழநி முருகன் கோயில்

அந்த வகையில் நடிகர்கள் சந்தானம், கெளதம் கார்த்திக், விதார்த், பாக்யராஜ், பூர்ணிமா, சமந்தா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா பழநி வருகை தந்தபோது படிப்பாதை வழியாக 600 படிகளில் சூடம் ஏற்றி மலைக்கோயிலில் வழிபாடு நடத்தினார். நடிகர் சந்தானம், பழநி மலை கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றார். தொடர்ந்து ரோப்கார் மூலமாக மலைக்கு மேல் சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ச்சியாக சினிமா பிரபலங்கள் பழநிக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி, அவரின் மனைவி நடிகை குஷ்பூ, மகள் மற்றும் உறவினர்களுடன் பழநி மலைக்கோயிலுக்கு வந்தார். தங்கள் 25 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக நேற்று இரவு பழநி வந்தனர்.

செல்பி எடுத்த சுந்தர் சி

இன்று காலை நடிகர் சுந்தர் சி முடிகாணிக்கை செலுத்தி நேர்த்தி கடன் செலுத்தினார். மேலும் சிறப்புப் பூஜையில் குடும்பத்துடன் கலந்துகொண்டார். இதில் சன்னியாசி அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் சுந்தர் சி குடும்பத்தாருக்கு பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.

சுந்தர் சி குஷ்பூ

சுந்தர் சி சார்பில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது. பழனி மலைக்கோயிலைச் சுற்றி வந்த சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவைப் பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர் மின் இழுவை ரயில் வழியாக கீழே இறங்கிச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.