கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு விமர்சித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (மார்ச்.9) கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமாகா சார்பில் 12 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மகளிருக்கு கொடுக்க கூடிய முக்கியத்துவத்தை சரியாக செய்து வருகிறோம். பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்.
தற்போது பெண்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள பாலியல் பிரச்னைகளுக்கு அரசு முற்று புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றன. பெண்கள் அச்சமின்றி வெளியில் செல்ல அரசு வழிவகுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெண்களின் முக்கியத்துவத்தையும், பெண்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் குறித்தும், ஆவண படங்கள், பாடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 2030-க்குள் பாலின சமத்துவதிற்கு ஐநா கூறியதை மகளிர் அனைவருக்கும் தெரிய படுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது.
அதனை சரி செய்வது ஆளும் ஆட்சியாளர்களிடையே உள்ளது. ஆட்சியாளர்களை பொறுத்தவரை மகளிர் பாதுகாப்பு மட்டுமல்லாமல் கள்ளசாராயம், போதை பொருட்களுக்கு முற்று புள்ளி வைக்கின்ற அரசாக செயல்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, மனமகிழ் மன்றங்கள் திறப்பது வெட்க கேடு. பண வசதி உள்ளவர்கள் மூன்றாவது மொழியை கற்க வசதி உள்ளது. ஆனால் பேருந்து போன்ற வாகனங்களில் சென்று படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்க வழியில்லை. கோவை மாநகராட்சியில் ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயர்த்துவதை நிரந்தமாக ரத்து செய்ய வேண்டும்.
கோவையில் மேம்பால வேலைகள் தொய்வாக நடக்கின்றன. மேம்பாலப் பணிகளை விரைவு படுத்த வேண்டும். கோவையில் கிரிக்கெட் மைதானம், வாகன நிறுத்தம் ஆகியவற்றை உரிய காலகெடுவுக்குள் செய்து தர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து தற்போது வரை வரவில்லை. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது. எனவே, மக்களை குழப்ப மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள். இதனை தென் மாநிலங்களுக்கும் பரப்ப நினைக்கிறார்கள்.
தமாகா மும்மொழிக் கொள்கை குறித்து பெற்றோர்களுக்காக, மாணவர்களுக்காக பேசுகிறோம். தமாகாவை பொறுத்தவரை கூட்டணி வலுப்பெற வேண்டும் என்று தான் நினைப்போம். பாஜகவுடன் இணைய பிற கட்சிகள் தவம் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியது குறித்து கேட்கிறீர்கள். அது அவரவர் கட்சியை சார்ந்தது. அதைப்பற்றி கூறுவதற்கு ஒன்றுமில்லை. எங்கள் கட்சி வேறு எந்த கட்சியை பற்றியும் கூறியது கிடையாது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.