“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை” – எல்.முருகன் விமர்சனம்

கோவை: “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கிறது” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 8) செய்தியாளர்களிடம் கூறியது: “மும்மொழிக் கல்வித் திட்டத்துக்கு ஆதரவாக, கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பெரிய ஆதரவு இருந்து வருகின்றது. கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை கைது செய்வது, கையெழுத்து இயக்கம் நடத்த விடாமல் தடுப்பது போன்ற செயல்களில் போலீஸார் ஈடுபடுகின்றனர். கையெழுத்து இயக்கம் வெற்றி அடைந்து கொண்டு இருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் முதல் முறையாக தமிழகத்தில், காவலர் பயிற்சி மையத்துக்கு ஆதித்ய சோழனின் பெயரை சூட்டியுள்ளார். மத்திய அரசு தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்கும் நிலையில், அரசு பள்ளிகளில் அதற்கான வாய்ப்பு இல்லை.பணம் இல்லாதவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நவீன தீண்டாமையை கடைபிடிக்கின்றனர், மகளிர் மேம்பாட்டுக்கான பணிகளை மத்திய அரசு செய்து உள்ளது.

தமிழகத்தில் பெண்கள் நடந்து கூட போக முடியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கின்றது. ரயில்கள், பொது இடங்களில் பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கின்றது.

மீனவர்களை காக்க புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கி அடிப்படை தேவைகள் செய்யப்பட்டுள்ளன. கடத்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு எங்கேயும் நடத்தவில்லை” என்று அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு சென்ற இணையமைச்சர் எல்.முருகன் வழிபாடு நடத்தினார். அதன் பின்னர், காரமடையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “ஊழல் நடப்பதால் தான் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதில் கவலைப்பட வேண்டிய விஷயமும், மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயமும் என்னவென்றால் அரசு நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலேயே சோதனை நடைபெறுகிறது.

அப்படியானால் அங்கே எந்த அளவுக்கு சட்டத்துக்கு விரோதமான காரியங்கள், விதிமீறல்கள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அமலாக்கத்துறையின் இந்த சோதனைகள் திமுக அரசு ஊழலில் ஊறி போய் இருப்பதையே காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.