நாகர்கர்னூல்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் பகுதியில் உள்ள ஸ்ரீசைலம் இடதுகரை தண்ணீர் கால்வாய் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி பிப்.22-ம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 8 பேரில், ஒருவரின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, “இடிபாடுகளுக்கு இடையில் இயந்திரத்தில் சிக்கியுள்ள ஒரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைகள் மட்டுமே தெரிந்தது. மீட்புக்குழுவினர் இறந்தவரின் உடலை மீட்க இயந்திரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.
சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை 16 – வது நாளை எட்டியது. இன்று இடிபாடுகளில் மனித உடல்கள் சிக்கியிருக்கிறதா என்பதை அறிய மீட்பு குழுவினருக்கு உதவிட காடேவர் நாய்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. கேரள போலீஸைச் சேர்ந்த பெல்ஜியன் மலினோய்ஸ் வகையைச் சேர்ந்த அந்த நாய்கள் 15 அடி ஆழத்தில் உள்ள உடல்களை மோப்பம் பிடிக்கும் திறன் கொண்டவை.
இதனிடையே, மீட்புப்பணிகளில் உதவிட ரோபாட்களை கெண்டுவந்து பயன்படுத்தும்படி தெலங்கானா நீர்வளத்துறை அமைச்சர் என். உத்தம் குமார் சனிக்கிழமை உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவித்தார்.
முன்னதாக, தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடது தண்ணீர் கால்வாய் திட்டத்துக்காக எஸ்எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. ஸ்ரீசைலம் முதல் நல்கொண்டா வரையிலான இந்த கால்வாய் திட்டத்தில் 14 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டப்பட்டது. இதில் சுரங்கத்தின் கடைசி பகுதியின் ஒரு பகுதி பிப்.22ம் தேதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள், பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என 8 பேர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணிகளில் ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படை மற்றும் போலீஸார் என 9 படைகளின் வீரர்கள் இரவும், பகலுமாக போராடி வருகின்றனர்.