நாட்டில் புதிதாக ஒரு புலிகள் காப்பகம் – பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: விலங்குகளை பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் இந்தியா எப்போதும் முன்னணியில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் உள்ள மாதவ் தேசிய பூங்கா, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் யாதவ், இதனை நாளை (திங்கள் கிழமை) திறந்து வைக்க இருக்கிறார். இது மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமாகும்.

மாதவ் தேசிய பூங்கா 1956 இல் நிறுவப்பட்டது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையும் மறைந்த காங்கிரஸ் தலைவருமான மாதவராவ் சிந்தியாவின் பிறந்த நாளான நாளை, மாதவ் தேசிய பூங்கா, புலிகள் காப்பகமாக மறுவடிவம் காண உள்ளது.

இதற்கு முன், சத்புரா, பெஞ்ச், பந்தவ்கர், கன்ஹா, சஞ்சய் துப்ரி, பன்னா, ராணி துர்காவதி மற்றும் ரதபாணி புலிகள் காப்பகங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக, மாதவ் தேசிய பூங்காவை 9வது புலிகள் காப்பகமாக அமைப்பதற்கான முயற்சி முதல்வர் மோகன் யாதவால் 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்த புலிகள் காப்பகம் 1751 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் தற்போது 3 வயது வந்த புலிகளும் 2 புலிக்குட்டிகளும் உள்ளன. மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கர் மற்றும் கன்ஹா புலிகள் காப்பகங்களிலிருந்து தலா ஒரு புலி நாளை மாதவ் புலிகள் காப்பகத்துக்குக் கொண்டுவரப்பட உள்ளது.

மத்தியப் பிரதேச அரசின் இந்த முன்முயற்சியை பாராட்டி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று(சனிக்கிழமை) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “பூமியின் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையை மீட்டெடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று முக்கியத்துவம் அளித்ததன் காரணமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்து பெரும் முன்னேற்றங்களைச் செய்து வருகிறது.

இதில், மத்தியப் பிரதேசத்தின் மாதவ் புலிகள் காப்பகம் இணைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம். அனைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்த வளர்ச்சி, தன்னலமின்றி இந்த நோக்கத்திற்காக பாடுபடும் நமது வன அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பூபேந்தர் யாதவின் பதிவை டேக் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “வனவிலங்கு பிரியர்களுக்கு ஆச்சரியமான செய்தி! இந்தியா வனவிலங்கு பன்முகத்தன்மையாலும், வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாச்சாரத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளைப் பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் நாம் எப்போதும் முன்னணியில் இருப்போம்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.