பல்லியா,
பையனுடன் செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள பாரா போகாரா பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குப்தா. மளிகைக் கடை வைத்துள்ளார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் அதிதி குப்தா (19 வயது). 11-ம் வகுப்பு படித்து வந்தார். மனோஜின் மனைவி மற்றொரு மகளின் தேர்வுக்காக அவருடன் பல்லியா சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் கடையில் இருந்து வீட்டுக்கு வந்த மனோஜ் குப்தா, அதிதியின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு தட்டியுள்ளார். அதிதி கதவை திறக்காததால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அதிதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனோஜ் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அதிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அதிதி செல்போனில் ஒரு பையனுடன் பேசியதாகவும், இதனை மனோஜ் கண்டித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.