போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் விடுதலையை எதிர்த்து உடனே மேல்முறையீடு செய்ய குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தல்

சென்னை: போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டால், அதை எதிர்த்து உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கு மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபரை போக்சோ வழக்கில் இருந்து விடுவித்து, இந்திய தண்டனை சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு மட்டும் குறைந்தபட்ச தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘போக்சோ சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததில் பல குறைகள் உள்ளன. இந்த விவகாரத்தில் அரசு ஏன் உடனே மேல்முறையீடு செய்யவில்லை? இதுபோன்ற விவகாரங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அரசு தரப்புக்கு வலியுறுத்தியது.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்களுக்காக போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளிலும், பிற கொடுங்குற்ற வழக்குகளிலும் விசாரணை நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்தால், விசாரணை அதிகாரியும், அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர்களும் உடனே அதில் சிறப்பு கவனம் செலுத்தி தீர்ப்பு விவரத்தை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். அந்த வழக்கில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சாத்தியக்கூறு உள்ளதா என்று உரிய சட்ட ஆலோசனை பெற்று, தாமதமின்றி மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை ஆய்வாளர்கள், புலன் விசாரணை அதிகாரிகள், அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.