வாஷிங்டன்,
அமெரிக்காவில் குற்றவாளிகளுக்கு தூக்கு, மின்சாரம் பாய்ச்சி தண்டனை, விஷவாயு செலுத்தி தண்டனை, துப்பாக்கியால் சுட்டு தண்டனை, விஷ ஊசி செலுத்தி தண்டனை என பல்வேறு வழிகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குபின் முதல் முறையாக அமெரிக்காவில் குற்றவாளிக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர் பிரெட் சிக்மன் (67). இவர் 2001ம் ஆண்டு தனது முன்னாள் காதலியை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றார். மேலும், முன்னாள் காதலியின் பெற்றோரை பேஸ்பால் மட்டையால் அடித்துக்கொன்றார்.
அதேவேளை, கடத்திச்செல்லப்பட்ட அப்பெண் தப்பிச்சென்று போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரெட் சிக்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது இரட்டைக்கொலை உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் பிரெட் சிக்மனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளியான பிரெட் சிக்மனுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த வகையில் மரண தண்டனையை நிறைவேற்றலாம் என்பதை தேர்ந்தெடுக்க குற்றவாளி பிரெட் சிக்மனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தன்னை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றும்படி பிரெட் சிக்மன் கூறினார். இதன்படி, துப்பாக்கியால் சுட்டு பிரெட் சிக்மனுக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.