India Won 2025 Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டி இன்று (மார்ச் 09) துபாயில் நடைபெற்றது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் நியூசிலாந்து அணியே பேட்டிங் செய்தது. ஓரளவு நல்ல தொடக்கத்தை அந்த அணியின் தொடக்க வீரர்கள் கொடுத்தாலும், இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.
தொடக்க வீரர் வில் யங் நிதானமாக விளையாட நினைத்த நிலையில், அவர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரச்சின் ரவீந்திராவும் நடையை கட்டினார். அவர் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் அணியின் கீ பிளேயர் வில்லியம்சன் அணிக்கு ரன்களை சேர்ப்பார் என நினைத்த நிலையில், அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில், டேரில் மிட்செல் அணிக்கு நிதானமாக ரன்களை சேர்க்க தொடங்கினார். அவர் 91 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். பின்னர் அடித்து ரன்கள் சேர்க்க நினைத்தபோது ஷமியின் பந்து வீச்சில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர் சென்ற இடத்தை மைக்கேல் பிரேஸ்வெல் நிரப்பினார். அவர் 40 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.
மேலும் படிங்க: IND vs NZ Final: சாம்பியன்ஸ் டிராபி பைனல் வரலாற்றில் ரச்சின் – யங் சாதனை!
இதனைத் தொடர்ந்து இந்திய அணி 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்த நிலையில், சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த பந்தை க்ளென் பிலிப்ஸ் பிடித்தார். அவரது சிறப்பான பீல்டிங் மூலம் அந்த கேட்ச்சை அவரால் பிடிக்க முடிந்தது.
சும்பன் கில் வெளியேறிய நிலையில், அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்களை இழந்தது, விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ரோகித் சர்மாவும் 76 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக அக்சர் படேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் ஆட்டம் இருந்தது. இருவரும் அணிக்கு ரன்களை சேர்ந்தனர். 60 ரன்களை பார்ட்னர்ஷிப்பை கடந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் இந்திய அணி 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 12 ஆண்டுகள் பிறகு கைப்பற்றியதோடு, மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவாரா பும்ரா? வெளியான அதிர்ச்சி தகவல்!