ரூ 2 கோடி வீடு; தருமபுர ஆதீனத்துக்கு தானமாக வழங்கியதன் ஆன்மிகப் பின்னணி

சீர்காழி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பொறியாளர் இமயவரம்பன் மார்க்கோனி என்னும் பக்தர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வீடு ஒன்றை ரூபாய் 2 கோடிக்கு வாங்கி அதை தருமபுர ஆதீனத்துக்குத் தானமாகக் கொடுத்துள்ளார். அந்த வீடு தருமபுர ஆதீனத்தின் குரு முதல்வரான குரு ஞானசம்பந்தர் 16 ம் நூற்றாண்டில் அவதாரம் செய்து பால்யத்தில் வாழ்ந்த வீடு என்பதே காரணம். குருஞான சம்பந்தரே தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்தவர். குருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

குருஞான சம்பந்தர் வாழ்ந்த வீடு

சிலிர்ப்பூட்டும் குரு ஞானசம்பந்தர் வரலாறு

ஸ்ரீவில்லிபுத்தூரில் சுப்பிரமணிய பிள்ளை – மீனாட்சியம்மை தம்பதிக்கு அருந்தவப் புதல்வனாக அவதரித்தார் சுவாமிகள். திருஞானசம்பந்தரைப்போல் தம் மகனும் சிவஞானம் பெற்றுச் சைவம் வளர்க்கும் ஞானாசிரியனாகத் திகழ வேண்டும் என்று கருதியே அவருக்கு, `ஞானசம்பந்தன்’ என்ற திருப்பெயரைச் சூட்டினர். அவர்களின் எண்ணம் ஈடேறியது. சிறுவயதுமுதலே ஞானசம்பந்தன் ஈசன் மீது பக்தியோடு இருந்தார்.

ஒருமுறை சொக்கநாதப் பெருமானை தரிசனம் செய்ய சுப்பிரமணிய பிள்ளையும் மீனாட்சி அம்மையும் ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்துச் சென்றனர். பொற்றாமரைத் தடாகத்தில் நீராடி ஈசனைக் கண்ணார தரிசித்து வழிபட்டனர். எங்கும் சிவகோஷம், சிவனடியார்களின் தரிசனம், வேளை தவறாமல் நடைபெறும் சிவபூஜை ஆகியவற்றைக் கண்ட ஞானசம்பந்தனுக்குள் ஓர் ஏக்கம் பிறந்தது. ‘ஈசனை விட்டுப் பிரிய வேண்டுமே’ என்கிற தவிப்பு உள்ளுக்குள் ஏற்பட்டது. ‘எப்போதும் இப்பதியிலேயே இருந்துவிடமாட்டோமா’ என்று ஏங்க ஆரம்பித்தார். சிவன்பால் சிந்தயை வைத்த யார்தான் அவன் சந்நிதியை விட்டு அகல விரும்புவார்…

சிவபூஜையே சிந்தனையாய்…

ஞானசம்பந்தனின் பெற்றோர் ஊருக்குப் புறப்படத் தயாராயினர். ஆனால் ஞானசம்பந்தனோ பொற்றாமரைக் குளத்தில் தனித்து அமர்ந்திருந்தார். ‘ஊருக்குப் போகலாம் வா’ என்று அழைத்தனர். ஆனால் சம்பந்தனோ, ” இந்த உடலுக்குத் தாய் தந்தையர் நீங்கள். ஆனால் என் ஆன்மாவோ அந்த ஈசனுக்குரியது. நான் அவர் சந்நிதானத்திலேயே இருக்க விரும்புகிறேன். சிவ சிந்தனையில் இருந்து சிவபூஜை செய்து சிவமார்க்கத் தொண்டில் ஈடுபட எனக்கு உத்தரவு கொடுங்கள்” என்று பணிவோடு வேண்டினார். இதைக்கேட்ட அவரின் பெற்றோர் உள்ளம் பூரித்தனர். எல்லாம் ஈசன் செயல் என்று தீர்மானம் கொண்டனர்.

ஞானசம்பந்தன் தினமும் பொற்றாமரைக் கரையில் அடியார்கள் சிவபூசை புரிவதைக் கண்டார். அந்தச் சிவபூஜையில் அவர்கள் மனம் கனிந்து அழுது தொழும் அற்புதக் காட்சியில் ஆவல் கொண்டு தானும் சிவபூஜை செய்ய விரும்பினார்.

தருமை ஆதீனம்

சிவபூஜை செய்வதென்றால் எப்படிச் செய்வது? அதற்கு சிவமூர்த்தம் வேண்டுமே… என்ற பல்வேறு கேள்விகள் அவருக்குள் உதித்தன.

அன்று இரவு அவர் கனவில் தோன்றிய சொக்கநாதப் பெருமான், `நாம் பொற்றாமரைத் தடாகத்தின் ஈசான்ய பாகத்தில் கங்கைக்குள் இருக்கிறோம். நம்மை எடுத்துப் பூசிப்பாயாக’ எனக் கூறி அருளினார். உடனே விழித்துக்கொண்ட ஞானசம்பந்தன் விடியும்வரை காத்திருந்து பொற்றாமரைக் குளம் சென்று அதில் மூழ்கி எழுந்தபோத அவர் கரங்களில் சிவமூர்த்தம் ஒன்று தானாக எழுந்தருளியது.

லிங்கம் கிடைத்துவிட்டது. ஆனால் சிவபூஜை செய்ய வேண்டுமானால் ஆசார்ய உபதேசம் வேண்டுமே… தனக்கான ஆசார்யனைக் காட்டி அருள ஞானசம்பந்தர் வேண்ட, ஈசன் கனவில் தோன்றி, `திருக்கயிலாய பரம்பரை – திருநந்தி மரபு மெய்கண்ட சந்தான வழியில் திருவாரூரில் விளங்கும் கமலை ஞானப்பிரகாசர் என்ற ஆசார்யரிடத்தில், வருகிற சோமவாரத்தில் ஞானோபதேசம் பெற்று நம்மைப் பூசிப்பாயாக’ எனக் கூறி மறைந்தார்.

ஈசன் அன்று இரவு கமலை ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந்தருளி, `ஞானசம்பந்தன் வருகிற சோமவாரத்தன்று வருவான்; அவனுக்கு ஞானோபதேசம் செய்து சிவபூசையும் எழுந்தருளுவிப்பாயாக’ என்றுகூறியருளினார்.

அடைமழையிலும் அணையாத தீபம்

ஞானசம்பந்தர் திருவாரூர் சென்று, பூங்கோயிலில் உள்ள சித்தீச்சரம் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்திருந்த கமலை ஞானப் பிரகாசரை தரிசித்து வணங்கித் தமக்கு தீக்ஷை அருளுமாறு வேண்டினார். ஞானப்பிரகாசரும் உபதேசம் வழங்கி சிவபூஜையைக் கற்றுக்கொடுத்தார். ஞானசம்பந்தர் முறையாக பக்தியோடு கற்று சிவபூஜை செய்ததோடு தன் குருவுக்குத் தொண்டும் செய்துவந்தார்.

ஒருநாள் பூஜை முடிந்து குருவும் சீடனும் வீட்டுக்குப் புறப்பட்டனர். கைவிளக்கை ஞானசம்பந்தர் ஏந்தியிருக்கத் தம்மை மறந்த நிலையில் சிவநாம ஜபத்தில் மூழ்கி இருந்தனர் இருவரும். வீட்டுக்குள் நுழைந்த ஞானப்பிரகாசர் சம்பந்தரை, ‘நிற்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். ‘குருவின் சொல்லைத் தட்டக் கூடாது’ என்று ஞானசம்பந்தரும் வீட்டின் வாசலிலேயே நின்றார்.

தருமை ஆதீனம்

அப்போது அடை மழை பெய்தது. அப்போதும் ஞானசம்பந்தர் அசையாமல் அங்கேயே அநுபூதி நிலையிலேயே நின்றார். மறுநாள் காலை வீட்டின் வாசலுக்கு ஞானப்பிரகாசரின் துணைவியார் வந்தபோது ஞானசம்பந்தர் விளக்கோடு வெளியில் நிற்பதைக் கண்டார். கனமழை பெய்தாலும் ஞானசம்பந்தர் மேல் மட்டும் மழை பொழியவில்லை. அவர் கையில் இருந்த விளக்கும் அணையாமல் இருப்பதைக் கண்டு வியந்து தன் கணவரிடம் சொல்ல அவர் ஓடிவந்து ஞானசம்பந்தரை உள்ளே அழைத்து அமரச் செய்தார். ‘இனி நீயே குருவாகித் தொண்டாற்றும் பக்குவத்தை அடைந்தார்’ என்பதை ஞானசம்பந்தருக்கு எடுத்துச் சொல்லி ஆசி வழங்கி அனுப்பிவைத்தார் ஞானப்பிரகாசர்.

அதன்பின் ஞானசம்பந்தர் ஞானத்தில் வளர்ந்து சிவமார்க்கத்தை உபதேசிக்கத் தொடங்கினார். அவரால் தொடங்கப்பட்டதே தருமபுர ஆதீனம். அப்படிப்பட்ட பெரும் ஞானமரபைத் தோற்றுவித்த குரு ஞானசம்பந்தர் அவதாரம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டை வாங்கி அங்கே அவருக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் ஆவலும் ஆதீன கர்த்தர்களுக்கு இருந்தது. அந்தக் கோரிக்கையை அறிந்த சீர்காழியைச் சேர்ந்த மார்க்கோனி என்னும் பக்தர் அந்த இடத்தைத் தற்போது வாங்கி அதை தருமை ஆதீனத்துக்கே தானமாக அளித்துள்ளார்.

தானமாகப் பெறப்பட்ட அந்த இடத்தில் குருஞானசம்பந்தருக்கு ஒரு கோயிலும் பாடசாலையும் அமைக்க ஆதீனத்தின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

சைவம் தழைக்கப் பாடுபட்ட குரு ஞானசம்பந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் அமைய இருப்பது குறித்து பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.