லாரியை மறித்து பணத்தை பிடுங்கிய ஆர்.டி.ஓ அலுவலக டிரைவர், புரோக்கர் கைது..

தஞ்சாவூரில் சில தினங்களுக்கு முன்பு ஜல்லி ஏற்றி வந்த லாரியை காரில் வந்த இருவர் மறித்துள்ளனர். காரை ஓட்டி வந்தவர் காருக்குள் ஆர்.டி.ஓ இருக்கிறார் லாரி எங்கிருந்து வருகிறது, பர்மிட் இருக்கா என கேட்டுள்ளார்.

அவர்கள் மீது சந்தேகமடைந்த லாரி டிரைவர் நீங்க ஆர்.டி.ஓ தானே, ஐடி கார்டு காட்டுங்கனு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் லாரி டிரைவரின் சட்டைபையில் இருந்த ரூ.16500 மற்றும் லைசென்ஸை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

லாரி டிரைவர்

அந்த நபர்களிடம் லாரி டிரைவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் லாரியை ஓட்டி வந்த டிரைவரான மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாரதி லாரன்ஸ் (32), மற்றும் கிளீனர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ்(20) இருவரும் தான் அந்த போலி ஆர்.டி.ஓ நபர்களால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸில் புகார் அளித்தார். இதில், புதுக்கோட்டையில் இருந்து, நன்னிலத்திற்கு லாரியில், ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்றேன். அப்போது தஞ்சாவூர் – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரில் வந்த இருவர் ஆர்.டி.ஓ என கூறி என்னிடம் இருந்த ரூ.16,500 பணம் மற்றும் என் லைசென்ஸை பறித்துக் கொண்டு சென்று விட்டதாகவும், கிளீனர் எடுத்த வீடியோவுடன் புகாராக கொடுத்துள்ளார். இதில் இருந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டபர்கள்

இதில் தஞ்சாவூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஓ-வின் கார் டிரைவராக இருக்கும் விவேகானந்தன்(49), ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புரோக்கராக செயல்படும் மாதவன் (39) இருவரும் தான் லாரி டிரைவர் பாரதி லாரன்ஸ்சிடம் மிரட்டி பணத்தை பறித்துச் சென்றவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸ் சிறையில் அடைத்தனர்.

மேலும், இவர்கள் இருவரும் இது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளர்களா, லாரி டிரைவர்கள் யாரேனும் இது போல் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.