மதுரையில் நடந்த மதிமுக நிர்வாகி குடும்ப விழாவில் கலந்துகொண்ட துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது “மக்காச்சோளத்துக்கு செஸ் வரி போட்டிருந்ததை நீக்க வேண்டும் என்று முதல்வரையும், துணை முதல்வரையும் நிதி அமைச்சரையும் சந்தித்து கேட்டுக் கொண்டேன். ஒரு சதவிகித வரியை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவித்தேன்.

தென் மாவட்டத்தில் சாத்தூர் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பட்டி தொழில் மக்களின் வாழ்வாதாரமாக இருந்த நிலையில் பிளாஸ்டிக் லைட்டரால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் லைட்டர் உதிரிப் பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து பேசினேன். தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன், நிச்சயம் அதற்கான முயற்சி எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் பொலிடிக்கல் அனலிஸ்ட், யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வேலை செய்வார். அதற்காக அவர் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு நடப்பது கிடையாது. ஜெயிக்கும் குதிரையில் பந்தயம் கட்டுபவர். தமிழகத்தில் அவர் சொல்வது நடக்காது.
விஜய்யை பொறுத்தவரை மிகப்பெரிய நட்சத்திரம். அவர் பின்னாடி லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். கட்சி ஆரம்பித்து அவருடைய கொள்கைகளை சொல்லி இருக்கிறார். அதை வரவேற்கிறோம். அதே நேரம் நடைமுறை விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள மக்களிடம் செல்ல வேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். அடுத்து வரும் காலங்களில் அவருடைய செயல்பாட்டை வைத்துதான் அரசியல் எதிர்காலம் இருக்கு. இந்த ஆட்சியை எதிர்க்கிற கட்சியாக அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார். இந்த அரசு நன்றாக செயல்பட்டுள்ளதா இல்லையா என்பதை 2026 தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள்.

கல்வி வளாகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பிரசார கோஷம் போடுவது, கையெழுத்து வாங்குவது தவறு. கல்வி வளாகத்தில் அரசியல் பேசுவது தவறு. ஆளுநராக முக்கிய பதவியில் இருந்த தமிழிசை அது கூட தெரியாமல் கோஷம் போடுகிறார். நான் தீவிரவாதியா என கேட்கிறார்? தீவிரவாதிகளை விட மதவாதத்தை பரப்புகிறவர்கள் மோசமானவர்களாக இருப்பதால்தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆங்கிலம் கூடாது என்று வட மாநிலங்களில் பேசுகின்றனர். ஆங்கிலம் இல்லாத இந்தியாவை உருவாக்க அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். ஆங்கிலம் இல்லாத வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா?
தமிழுக்கு உண்டான அங்கீகாரத்தை திராவிட இயக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழை வளர்க்க முயற்சிகள் எடுத்து வருகிறார்கள் அதற்கு முதல்வர் பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். தமிழ் வளர்ச்சிக்காக திராவிட இயக்கங்கள் எடுத்த முயற்சியை மறுக்க முடியாது” என்றார்.