சென்னை: காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, கரூர், நாகை, சிவகங்கை, தேனி ஆகிய 9 நகரங்களில் ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, சமூகநலத் துறை சார்பில் 100 இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, தொழிலாளர் நலத் துறை சார்பில் 100 ஆட்டோ, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் சுயஉதவி குழுவினருக்கு 50 மின் ஆட்டோ என 250 பெண்களுக்கு ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1,000 சுயஉதவி குழுவினருக்கு பல்வேறு பயன்களை தரக்கூடிய அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்கான நாள் இது. ரத்த பேதம், பால் பேதம் கிடையாது என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. அதுவே முழுமையான சமூக நீதி. பெரியார் தனது வாழ்நாளெல்லாம் பெண் விடுதலைக்காக உழைத்தார். திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு உரிமைகள் மீட்டுத் தரப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தரப்பட்டது. சுயமரியாதை திருமண சட்டத்தை அண்ணா நிறைவேற்றினார். பெரியார் போட்ட தீர்மானத்தை சட்டமாக்கி சொத்துரிமை தந்தார் கருணாநிதி.
காவல் துறையில் பெண்கள் சேர்ப்பு, மகளிர் சுயஉதவி குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என பல முற்போக்கு திட்டங்களையும் கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போதைய திமுக ஆட்சியில், புதுமைப்பெண், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை, வேலூர், சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்பட்ட ‘தோழி’ விடுதிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய நகரங்களில் ரூ.72 கோடி செலவில் 700 படுக்கைகளுடன் புதிதாக தோழி விடுதிகள் அமைக்கப்படும். அங்கு 24 மணி நேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என பல வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்த விழாவில் சுயஉதவி குழு பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம், தங்களது தயாரிப்பு பொருட்களை 25 கிலோ வரை கிராம, நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்து செல்லலாம். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் பொருட்களுக்கு 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி, ஆவின் பொருட்களுக்கு தள்ளுபடி விலை, இ-சேவை மையங்களில் 10 சதவீதம் சேவை கட்டணம் குறைவு ஆகிய சலுகைகள் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
சாதனையாளர்களுக்கு விருது: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் யசோதா சண்முக சுந்தரத்துக்கு இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருதையும், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திவரும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சவுமியாவுக்கு பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான மாநில விருதையும் முதல்வர் வழங்கினார்.
பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் வகையில் சிறப்பாக செயல்பட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கு 2025-ம் ஆண்டுக்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதையும் முதல்வர் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் 34,073 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 4.43 லட்சம் பெண்களுக்கு ரூ.3,190 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 46,592 பெண்களுக்கு ரூ.366.26 கோடி வங்கிக் கடன் இணைப்புகளை முதல்வர் வழங்கினார்.
‘நன்னிலம்’ நில உடைமை திட்டத்தின்கீழ் பெண்களுக்கு நிலப் பத்திரங்கள், நிலம் வாங்குவதற்கான மானியம், வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்கள் வீடுகள் பெற, வீடுகள் கட்டிக் கொள்வதற்கான உத்தரவுகள், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பணி நியமன ஆணைகள் ஆகியவற்றையும் முதல்வர் வழங்கினார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்கள், ஆளிநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில், தமிழக காவல் துறை சார்பில் பெண் அதிரடிப்படை காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள், அரசின் திட்டங்கள் குறித்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சி.வி.கணேசன், கயல்விழி செல்வராஜ், மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி என்விஎன் சோமு, கலாநிதி வீராசாமி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், துணை முதல்வரின் செயலர் பிரதீப் யாதவ், துறை செயலர்கள் சுப்ரியா சாகு (சுற்றுச்சூழல்), ஜெயஸ்ரீ முரளிதரன் (சமூகநலம்), வீரராகவ ராவ் (தொழிலாளர் நலன்), மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா சிங், அரசு உயர் அதிகாரிகள், மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.