IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் (ICC Champions Trophy 2025) அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் (India vs New Zealand) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மார்ச் 9) நடைபெற இருக்கிறது.
IND vs NZ Final: இறுதிப்போட்டியை நேரலையில் பார்க்க…
இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்திலும் செயலிலும் பல்வேறு மொழிகளில் நீங்கள் நேரலையில் போட்டியை காணலாம் (India vs New Zealand Live Telecast).
IND vs NZ Final: இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இந்திய அணி இந்த தொடர் முழுவதும் 4 போட்டிகளை விளையாடி நான்கிலும் வென்று பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது. நியூசிலாந்து அணி 4இல் இந்தியாவிடம் மட்டுமே குரூப் சுற்றில் தோல்வியடைந்தது, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மாபெரும் வெற்றியை குவித்து இந்திய அணியை காட்டிலும் பெரும் நம்பிக்கையுடன் நியூசிலாந்து களமிறங்குகிறது. அந்த வகையில், இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு என பார்த்தால் நியூசிலாந்து அணிக்கு 55% மற்றும் இந்திய அணிக்கு 45% வாய்ப்புள்ளது எனலாம்.
IND vs NZ Final: நியூசிலாந்தை வீழ்த்தியதே இல்லை…
நியூசிலாந்து அணி கடைசியாக வெள்ளைப் பந்தில் ஐசிசி கோப்பையை வென்று 25 ஆண்டுகள் ஆகிறது. 2000ஆம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்தி அப்போது கோப்பையை வென்றது. இப்போதும் அதே முனைப்புடன் நியூசிலாந்து காத்திருக்கும். மேலும், இதுவரை ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்றதில்லை. இவையெல்லாம் நியூசிலாந்து பக்கமே அதிக சாதகத்தை கொடுத்தாலும், இந்திய அணிக்கும் வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது எனலாம் (India vs New Zealand Win Prediction).
IND vs NZ Final: டாஸ் வென்றால் என்ன செய்யணும்?
எந்த அணி டாஸ் வென்றாலும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும் எனலாம். ஏனென்றால் இந்த ஆடுகளம் இதுவரை யாராலும் கணிக்க முடியாத அளவிற்கே இருந்துள்ளது. மேலும், இந்த தொடரில் இதுவரை ரோஹித் சர்மா (Rohit Sharma) டாஸ் வெல்லாதது பெரிய பிரச்னையாக இருந்ததில்லை. இருப்பினும் நாளைய போட்டியில் டாஸ் வெல்வதும் முக்கியமான ஒன்றாகும். நியூசிலாந்து அணி (Team New Zealand) டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை அடித்து, இந்திய அணியை சேஸிங் அழுத்தத்தில் போட முயற்சிக்கும். ஆடுகளம் கடந்த ஆஸ்திரேலியா போட்டியை போல் இருந்தால் அது நியூசிலாந்து அணிக்கே சாதகமாக இருக்கும் எனலாம்.
pic.twitter.com/lS7WpRQXMT
— BCCI (@BCCI) March 8, 2025
IND vs NZ Final: நியூசிலாந்தை இதற்குள் சுருட்ட வேண்டும்
ஒருவேளை நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் 250-260 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். பனிப்பொழிவின் தாக்கம் பெரிதாக இருக்காது இந்திய அணி 4இல் 3 போட்டிகளில் சேஸ் செய்த வென்றிருக்கிறது என்றாலும் இரவில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அந்த வகையில் 250-260 ரன்களை அடிக்கலாம். ஸ்கோர் 300-ஐ தொட்டுவிட்டால் சிக்கல் பெரிதாகிவிடும் இந்தியாவுக்கு. அதே போல் இந்திய அணி (Team India) முதலில் பேட்டிங் செய்தாலும் 300 ரன்களை அடித்துவிட்டால் நிச்சயம் போட்டியை வென்றுவிட்டது என சொல்லிவிடலாம்.
IND vs NZ Final: ரவீந்திராவை கட்டுப்படுத்துவது எப்படி?
நியூசிலாந்து பேட்டிங் வரிசையில் கான்வேவுக்கு தற்போதைக்கு இடமில்லை. வில் யங் – ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஓப்பனிங்கில் வருவார்கள். இருவரையும் பவர்பிளேவிலேயே ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். இருவரும் சுழற்பந்துவீச்சை சிறப்பாக விளையாடக்கூடியவர்கள்.
செட்டிலாகிவிட்டால் அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச்சென்றுவிடுவார்கள். கடந்த 2023 உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளிலும் ரவீந்திராவை (Rachin Ravindra) ஷமியே ஆட்டமிழக்க வைத்தார். கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா ரவீந்திராவின் விக்கெட்டை கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல் ரவீந்திராவை பெரியளவில் அச்சுறுத்த முடியாது எனலாம்.
IND vs NZ Final: வில்லியம்சனை அவுட்டாக்க என்ன செய்யலாம்?
அதன்பின், கேன் வில்லியம்சன் (Kane Williamson) இன்றைய போட்டியில் முக்கிய வீரராக இருப்பார். 11-40 ஓவர்கள் வரை அவர் களத்தில் இருக்க ரன்களும் வந்துகொண்ட இருக்கும். அவர் பேட்டிங் செய்யும்போது இரண்டு முனையிலும் இடதுகை ஸ்பின்னர்களான ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலை வீசவைத்து, அவர் இறங்கிவிளையாட தூண்டும் வகையில் ஃபீல்ட் செட் செய்ய வேண்டும். அவரால் எளிதாக ஒன்று, இரண்டு ரன்களை ஓடி எடுக்க முடியாவிட்டால் அவர் இறங்கி விளையாட முயல்வார். அந்த வகையில், கடந்த போட்டியை போல ஸ்டம்பிங் வாய்ப்பும் கிடைக்கும்.
IND vs NZ Final: மிடில் ஆர்டரை போட்டுத் தள்ள…
டேரில் மிட்செலுக்கு கடந்த முறையே சிறப்பான ஸ்கெட்சை இந்திய அணி போட்டது. அவரால் இயல்பாக ஸ்வீப்போ, ரிவர்ஸ் ஸ்வீப்போ அடிக்க முடியவில்லை. அவருக்கு இறங்கி வந்து அடிக்கும் வாய்ப்பையும் சுழற்பந்துவீச்சாளர்கள் கொடுக்கவில்லை. டேரில் மிட்செலை மீண்டும் வீழ்த்த குல்தீப் யாதவ் சிறந்த ஆயுதமாக இருப்பார். டாம் லதாமிற்கும் ஸ்வீப் அடிக்க வாய்ப்பு கொடுக்காமல் அவர் அழுத்தத்தில் உள்ளாக்கினால் அவரது விக்கெட்டும் எளிதில் கிடைக்கலாம்.
IND vs NZ Final: வருண் சக்ரவர்த்தி முக்கிய வீரர்
கிளென் பிளிப்ஸ், பிரேஸ்வெல், சான்ட்னர், ஜேமீசன் என பெரிய பேட்டிங் லைன்-அப் இருந்தாலும் இந்திய அணிக்கு இவர்கள் பிரச்னையளிக்க வாய்ப்பு குறைவு. பிளிப்ஸ் இறங்கிவந்து அடிப்பதில் தயக்கம் காட்டுவார் என்பதால் வருண் சக்ரவர்த்தி (Varun Chakaravarthy) இவரது விக்கெட்டை எடுக்க துருப்புச்சீட்டாக இருப்பார்.
IND vs NZ Final: இந்திய அணி பவர்பிளேவில் செய்ய வேண்டியது?
இந்திய அணி பேட்டிங் செய்யும்போது, 10 – 10 ஓவர்களாக திட்டமிட்டு விளையாட வேண்டும். அது முதல் பேட்டிங் என்றாலும் சரி சேஸிங் என்றாலும் சரி, அடிக்க வேண்டிய ஸ்கோரை மனதில் வைத்துக்கொண்டு 10 – 10 ஓவர்களாக ஆட்டத்தை கட்டமைக்க வேண்டும். முதல் 10 ஓவர்களில் குறைந்தபட்சம் 70 ரன்கள் அடிப்பது பெரிய அடித்தளத்தை அளிக்கும். மாட் ஹென்றி – கைல் ஜேமீசன் – வில் ஓ ரூர்க் போன்றோர் வீசும் நிலையில், ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியை கையாள்வார்.
IND vs NZ Final: விராட் கோலி செய்ய வேண்டியது என்ன?
சுப்மான் கில் கொஞ்சம் பொறுப்பெடுத்து ஆட்டமிழக்காமல் பெரிய இன்னிங்ஸை கட்டமைக்க முயற்சிக்க வேண்டும். அதன்பின் விராட் கோலி (Virat Kohli) நிச்சயம் 50 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும். அவர் களத்தில் இருந்தால் மறுமுனையில் இருப்பவர்களுக்கு அழுத்தம் குறையும்.
IND vs NZ Final: மிடில் ஓவர்களில் அடிக்க வேண்டிய ஸ்கோர்
ஷ்ரேயாஸ் ஐயர்தான் (Shreyas Iyer) சான்ட்னர், பிரேஸ்வெல், ரச்சின், பிலிப்ஸ் போன்றோரின் சுழற்பந்துவீச்சை சிதறடிப்பார் எனலாம். மிடில் ஓவர்களில் இவரின் அதிரடியும் பின்வரிசை வீரர்களுக்கு வேலையை எளிமையாக்கும். 11-40 ஓவர்களில் 130 – 150 ரன்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு 10 ஓவர்களிலும் 50 ரன்களையாவது எடுக்க வேண்டும்.
IND vs NZ Final: பழிவாங்க நல்ல வாய்ப்பு
அதன்பின், அக்சர் பட்டேல், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா என நீண்ட பேட்டிங் வரிசை இருப்பதால் தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால் முடிவு குறித்து பெரிதாக கவலைப்படவும் தேவையில்லை. கடைசி 10 ஓவர்களில் 70-80 ரன்களுக்கு மேல் அடித்தால் ஆட்டம் நிச்சயம் இந்திய அணி பக்கம்தான். எனவே, இந்திய அணி இந்த விஷயங்களை செய்தால், 2000 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மற்றும் 2021 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆகியவற்றுக்கு நியூசிலாந்து அணியை பழிவாங்க முடியும் எனலாம்.