Ind v Nz : 'நியூசிலாந்தை வீழ்த்த இந்தியா செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!' – என்னென்ன தெரியுமா?

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இன்று மோதவிருக்கின்றன. இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்த வேண்டுமெனில் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

Nz

நியூசிலாந்தின் மிடில் ஓவர் பலம்:

பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் நியூசிலாந்து அணி 11-40 இந்த மிடில் ஓவர்களில் மிகச்சிறப்பாக ஆடி வருகிறது. ரிஸ்க் எடுக்காமல் விக்கெட் விடாமல் பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்து கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக ஆடுவதற்கான அடித்தளத்தை இங்கே அமைத்து விடுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த மிடில் ஓவர்களில் 156 ரன்களை சேர்த்து 2 விக்கெட்டுகளை மட்டுமே விட்டிருந்தனர். வங்கதேசத்துக்கு எதிராக 154 ரன்களையும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 196 ரன்களையும் மிடில் ஓவர்களில் எடுத்திருந்தனர். அந்தப் போட்டிகளிலும் மிடில் ஓவர்களில் 2 விக்கெட்டுகளைத்தான் இழந்திருந்தனர்.

மிடில் ஓவர்களில் இப்படி நின்று ஆடுவதன் மூலம் கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக ஆடுவதற்கான லைசன்ஸ் கிடைக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி 10 ஓவர்களில் மட்டும் 110 ரன்களை சேர்த்திருந்தனர். ஆக, மிடில் ஓவர்களில் நியூசிலாந்தை அதிக விக்கெட்டுகளை இழக்க செய்தால் மட்டுமே அவர்களை சுமாரான ஸ்கோருக்குள் கட்டுப்படுத்த முடியும்.

லீகில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்திய போது அதைத்தான் செய்திருந்தது. இந்திய பௌலர்கள் மிடில் ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அதே விஷயத்தை மீண்டும் இங்கே செய்ய வேண்டும்.

பொறுப்பை எடுத்து ஆடப்போகும் வீரர் யார்?

’45 mins of Bad Cricket’ பாணியிலான சாக்குப் போக்குகளை இந்திய ரசிகர்கள் பல முறை கேட்டிருக்கின்றனர். நன்றாக ஆடக்கூடிய இந்திய அணியின் பேட்டர்கள் முக்கியமான போட்டியில் போய் Collapse ஆவது வழக்கம்தான். இந்த இறுதிப்போட்டியிலும் அப்படி நடந்தால் பொறுப்பை ஏற்று ஆடப்போகும் வீரர் யார் என்பதுதான் கேள்வி. நம்பர் 8 வரை பேட்டிங் இருப்பது இந்திய அணிக்கான கூடுதல் சௌகரியம். முதலில் கில் கடைசி வரைக்கும் நின்று ஆடும்படியான ரோலை ஏற்றிருந்தார். இப்போதும் அவருக்கு அந்த ரோல்தான். ஆனால், கடந்த சில போட்டிகளாக அவரால் அதை செய்ய முடியவில்லை. ஆக, இந்த இறுதிப்போட்டியில் முதலில் கில் அவரது முனையில் விக்கெட் விடாமல் கடைசி வரை நின்று ஆட முயற்சி செய்ய வேண்டும். அவர் இல்லையெனில் அடுத்ததாக கோலிதான்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் கோலி என்ன மாதிரியான ஆட்டத்தை ஆடினாரோ அதை இங்கே ஆட வேண்டும். ஐ.சி.சி தொடர்களில் கோலியை மலை போல் நம்பலாம். கடந்த டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் கோலி ஆடிய இன்னிங்ஸ் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

Rohit Sharma with Virat Kohli

அதே பொறுப்போடும் பக்குவத்தோடும் கோலி இங்கேயும் ஆடியாக வேண்டும். கில், கோலி இருவரும் சொதப்பும்பட்சத்தில் நின்று ஆடக்கூடிய அந்த ரோலை கே.எல்.ராகுல் எடுக்க வேண்டும். யாரோ ஒரு வீரர் ஒரு முனையை காத்து விக்கெட் விடாமல் ஆடினால் மட்டும்தான் துபாய் பிட்ச்சில் வெற்றியை நோக்கி நகர முடியும்.

ரோஹித் என்ன செய்யப்போகிறார்?

முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேயில் இந்திய அணியின் பேட்டர்கள் எப்படி ஆடப்போகிறார்கள் என்பது முக்கியது. கில் எப்படியும் நின்றுதான் ஆடுவார். ரோஹித்தான் அட்டாக் செய்வார். ஆனால், இந்தத் தொடரில் பவர்ப்ளேயில் மிகக்குறைவான எக்கானமி வைத்திருக்கும் அணி நியூசிலாந்துதான். ரோஹித்துக்கு இது கூடுதல் சவாலாக இருக்கும். ஆனாலும் அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே ரிஸ்க் எடுத்து ஆடும்பட்சத்தில் இந்தியாவுக்கு நல்ல மொமண்டம் கிடைக்கும். ஒரு நல்ல ஸ்கோரை முதல் 10 ஓவர்களுக்குள் எட்டும்பட்சத்தில் அது மிடில் ஓவர்களில் இந்திய அணியின் மீதான ரன் அழுத்தத்தை குறைக்கும்.

ரோஹித் சர்மா

கோலி vs ஸ்பின்னர்கள் :

இந்தப் போட்டியை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் கோலி பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டியதும் முக்கியம். ஆனால், அது அத்தனை எளிதான விஷயம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராகத்தான் அதிகமாக திணறுகிறார். அதிலும் குறிப்பாக லெக் ஸ்பின்னர்களுக்கும் இடது கை ஸ்பின்னர்களுக்கும் எதிராக ரொம்பவே திணறுகிறார். அதுதான் இங்கே பிரச்சனை. நியூசிலாந்து அணியில் சாண்ட்னர், ரச்சின் என இரண்டு இடதுகை ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். சாண்ட்னருக்கு எதிராக கடைசி 5 இன்னிங்ஸ்களில் 2 முறை கோலி அவுட் ஆகியிருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட்டும் குறைவாகத்தான் இருக்கிறது. ரச்சினுக்கு எதிராகவும் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவுதான். ஆக, இவர்களிடம் விக்கெட்டை விடாமல் கோலி எப்படி ஆடப்போகிறார் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.

ஸ்பின்னர்கள் ஜாக்கிரதை:

இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராக இழந்திருந்தது. இதை வைத்து நியூசிலாந்து அணி ஸ்பின்னர்களுக்கு எதிராக மோசமாக ஆடக்கூடிய அணி என எடுத்துக்கொள்ள முடியாது. கேன் வில்லியம்சன், டாம் லேதம், ரச்சின் என ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடக்கூடிய பேட்டர்கள் நிறையவே அந்த அணியில் இருக்கிறார்கள். மேலும், இந்திய அணியை தவிர்த்து அவர்கள் ஆடியிருக்கும் 3 போட்டிகளில் மொத்தமாக சேர்த்தே 2 விக்கெட்டுகளைத்தான் ஸ்பின்னர்களுக்கு எதிராக இழந்திருக்கிறார்கள்.

Nz

கடந்த போட்டியில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றிருக்கிறோம். வருண் சக்கரவர்த்தியை சிறப்பாக எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டுமன யோசித்திருக்கிறோம் என சாண்ட்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். எனவே இந்திய ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்டர்களை அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.