IND vs NZ Final: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிளேயிங் லெவனில் இந்திய அணி மாற்றம் செய்யவில்லை. நியூசிலாந்து அணி மேட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித்தை சேர்த்தது.
IND vs NZ Final: மீண்டும் டாஸ் தோற்ற ரோஹித் சர்மா
வழக்கம்போல் இந்த முறையும் ரோஹித் சர்மா டாஸை தோற்றார். ரோஹித் தொடர்ச்சியாக 12வது முறையாகவும், இந்திய அணி 15வது முறையாகவும் டாஸை இழந்துள்ளது. நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் வில் யங் – ரச்சின் ரவீந்திரா இணை களமிறங்கியது.
IND vs NZ Final: பவர்பிளேவில் மிரட்டிய ரச்சின் ரவீந்திரா
இந்த இணை எவ்வித பிரச்னையும் இன்றி ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரன்களை அடித்தனர். இதனால் 6வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச வந்தார். அந்த ஓவரில் சிறு சிறு அழுத்தம் ஏற்பட்டது, 7வது ஓவரில் நியூசிலாந்து 50 ரன்களை விக்கெட் இழப்பின்றி கடந்தது. அப்போது 8வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீச வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரச்சின் கொடுத்த கேட்சை ஷ்ரேயாஸ் ஐயர் தவறவிட்டிருந்தார்.
IND vs NZ Final: ரச்சினை அவுட்டாக்கிய அந்த பந்து…
முதல் பவர்பிளே முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 69 ரன்களை எடுத்திருந்தது. 11வது ஓவரின் முதல் பந்தை குல்தீப் யாதவ் வீச வந்தார். குல்தீப் யாதவ் போட்ட அந்த குக்லியை கணிக்காமல் ரச்சின் ரவீந்திரா பந்தை கோட்டைவிட்டார். இதனால் பந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ஓவர் தி விக்கெட்டில் வந்து பந்தை ஸ்டம்பிற்குள் போகும் வகையில் திருப்பியதால் ரச்சின் ரவீந்திரா அதனை எதிர்கொள்ள இயலாமல் திணறி ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உடன் 37 ரன்களை குவித்திருந்தார்.
IND vs NZ Final: அடுத்தடுத்து சீர்குலைந்த மிடில் ஆர்டர்
அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சனை குல்தீப் யாதவ் தனது மற்றொரு அற்புதமான பந்தால் வலையில் சிக்கவைத்தார். வில்லியம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் ஒருபக்கம் நிலையாக நின்று விளையாடினார். லேதம் 14 (30), கிளென் பிளிப்ஸ் 34 (52) ரன்களை குவித்து சிறு சிறு பார்ட்னர்ஷிப்பை கொடுத்தாலும் பெரியளவில் நியூசிலாந்து அணியிடம் இருந்த அழுத்தம் குறையவே இல்லை.
IND vs NZ: மிட்செல் மிக பொறுமையான ஆட்டம்
அரைசதம் கடந்து, ஷமி டெத் ஓவர்களில் பந்துவீச வர மிட்செல் அவரை அட்டாக் செய்ய முடிவெடுத்தார். இருப்பினும், ஷமியின் ஸ்லோயர் பந்தில் சிக்கி 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 103 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்திருந்தார். வருண் சக்ரவர்த்தி காலில் ஏற்பட்ட சிறு சுளுக்கு காரணமாக பெவிலியன் திரும்பினார். அவர் 10 ஓவர்களை வீசி 45 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
IND vs NZ Final: இந்திய அணியின் இலக்கு
கடைசியில் மைக்கெல் பிரேஸ்வெல் அரைசதம் அடித்து உதவ நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை அடித்திருந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் மற்றும் வருண் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் ஷமி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணி 252 ரன்கள் இலக்குடன் தற்போது களமிறங்குகிறது.
மேலும் படிக்க | IND vs NZ: இன்று தோற்றாலும் ஜெயித்தாலும்… ஓய்வை அறிவிக்கும் இந்த 4 இந்திய வீரர்கள்