`இசை என்னவென்று தெரிந்திருந்தால், இசைப்பதையே நிறுத்தியிருப்பேன்!’ – இளையராஜா குறித்து பார்த்திபன்

இளையராஜா தன்னுடைய முதல் சிம்போனியை லண்டனில் அரங்கேற்றிவிட்டு, இன்று சென்னை திரும்பி இருக்கிறார்.

அதுக்குறித்து உள்ளே வெளியே, அழகி உள்ளிட்ட படங்களில் இளையராஜா உடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…

இசையின் ராஜா

“என் தாய்க்கு முன்பே ஆயிரம் கோடி தாய்மார்கள் இப்பூமியில் அவதரித்திருந்தாலும் என்னை ஈன்றெடுத்தவளை தானே நான் என் தாய் என்பேன். அப்படி இசையை நான் அறிந்தது அந்த இசை சித்தர் ரூபத்தில் தான்.

S M சுப்பையா நாயுடு, M S விஸ்வநாதன் போன்ற இசை மேதைகள் கொடி கட்டிய இசையுலகில், கோலோச்சிய இசையின் ராஜா.

‘இசையராஜா’, ‘இசை (alias) இளையராஜா’ என்றெல்லாம் இசை என்றால் என்னவென்று தெரியாத என்னால் புகழப்பட்ட இளையராஜா.

அவரின் இசையைப் போன்றே நேசிக்கிறேன்…

“பார்த்திபனிடம் கேட்டது என்னிடம் நானே கேட்டுக் கொண்டது, எனக்கே இசை என்றால் என்னவென்றே தெரியாது. தெரிந்திருந்தால் இசைப்பதையே நிறுத்தியிருப்பேன்” என்றெல்லாம் தன்னடக்கத்துடன் அவரின் உதடுகள் பேசுவதை விட, “என்னைத் தவிர எவன் கர்வம் கொள்ள முடியும்?” என்று அவர் உள்ளத்திலிருந்து திமிரி உச்சஸ்தாயியில் உதிர்க்கும் உயிர்மை வார்த்தைகளையே நான் அவரின் இசையைப் போன்றே நேசிக்கிறேன்.

இன்றவர் சொல்வதை என்றிலிருந்தோ நான் சொல்லி வருகிறேன். அவர் செய்த சாதனைகளுக்கு கர்வம் கொள்ளக் கூட நேரமின்றி இன்னும் சாதிக்க இசைக்குள் மூழ்கி விடுகிறார் என்று. அவரின் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தின் மூலை முடுக்கெல்லாம் அவருக்கு நான் வழங்கிய நினைவு பரிசுகளே நிரம்பி வழியும் என் நினைவுக்குள் அவரே ததும்பி வழிவதைப் போல!!!

திரு கலைமணி என்ற கதாசிரியர் “அவர நம்பி இருக்கிற சினிமா கம்பெனிய எல்லாம் காய வைச்சுட்டு சிம்பொனி எழுதப் போயிட்டாரு” கம்பெனி சிம்பொனி என்று காமெடி PUN-ணினார், முதன் முதலில் அவர் சிம்பொனி எழுதச் சென்ற போது. எண்பது என்பது மூப்பிற்கு முன்னுரிமை வழங்கும் பருவம்! எண்பத்தி இரண்டிலும் பண்ணைபுரத்தில் பண்ண இசைத்தவம் போல ஓயாது உழைத்து உலகெங்கும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி , இடை இடையே இன்னும் இசையை இழைத்து இந்த சிம்பொனியை (சத்தியமாக spelling அன்றி வேறொன்றறியோம் பராபரமே) அரங்கேற்ற அவர் லண்டனின் அப்பல்லோ அரங்கில் நுழைகையில் ….

அப்பல்லோ என்ற விண்கலம் சந்திரனைத் தொட தீப் பிழம்புகளை கக்கியபடி சீறி புறப்பட்ட போது உலகமே கொண்ட உவகைப் போல என் உள்ளமும் உணர்ச்சி பிழம்பானது.

இன்னும் உண்மையாக சொல்லப் போனால்….

நானே ஒரு தாய் ஸ்தானத்தில் புதிய சாதனை படைக்கப் போகும் என் இளைய மகனை பார்ப்பதைப் போலவே பெருமித்த்துடன் பார்த்தேன்.

இளையராஜாவை அம்மான்னு ஆரம்பிச்சு கடைசியில மகன்னு முடிச்சிட்டீங்களேன்னு நீங்க கேக்காம கேக்குறது எனக்கே கேக்குது.

மற்ற இயக்குனர்களின் வெற்றியை உளமாற நான் பாராட்டினாலும், இயக்குனராக முழு வேகத்தில் தயாராகி வரும் என் மகனின் வெற்றியை என் உயிரே கொண்டாடுமே! அப்படியொரு ஆனந்த யாழ் இதயத்திற்குள் மீட்டப்படுகிறது!”.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.