மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரத்தை அடுத்த குண்ணப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ. 515 கோடி முதலீட்டில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவன தொழிற்சாலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்பத்தியை தொடங்கிவைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கோத்ரெஜ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் உற்பத்திக்கான அதிநவீன ஆலையை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டத்தை, தமிழ்நாட்டில் அமைத்ததில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதைவிட இரண்டு மடங்கு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் உங்களின் தொழில் நிறுவனத்தை நிறுவுவது, தமிழ்நாட்டின் மேல் நீங்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் வெளிப்பாடு.
உலக நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு தான் முதல் முகவரி என்று நீங்கள் வெளிப்படையாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசுக்கும், கோத்ரேஜ் நிறுவனத்துக்கும் இது ஒரு வெற்றிகரமான நிகழ்வு. ரூ.515 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 1,000 குடும்பங்களை வாழ்விக்க இருக்கிறீர்கள் என்று மகிழ்ச்சி அடைகிறேன். கோத்ரெஜ் நிறுவனத்துடன் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அடுத்த ஐந்தே மாதத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இந்நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் தொடங்கி வைக்கக் கூடிய நிகழ்ச்சியை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருட்களின் சந்தை, மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்தத் துறை மிகவும் ஆற்றல்மிக்கது, போட்டித்தன்மை கொண்டது. இனிவரும் காலங்களில், மேலும் இந்த நிலை அதிகரிக்கும். மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று என்பதால், தமிழ்நாடு பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. பிரிட்டானியா, டாபர், ஐடிசி நிறுவனங்கள், உங்களின் நிறுவனமும் சேர்த்து, பல எப்எம்சிஜி நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்கள், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துறை மேலும் வளர்ச்சி பெற தமிழ்நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பெருநிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரி. இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எங்களின் லட்சிய இலக்கை அடைவதற்கு, அனைத்து முன்முயற்சிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது. பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது என்று உலகத்துக்கு தெரியும். இந்த உற்பத்தித் திட்டத்தின் சிறப்பம்சமாக, 50 விழுக்காடு பெண்களுக்கும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதற்கு நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்று நான் அடிக்கடி குறிப்பிட்டு சொல்லி வருகிறேன். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தில், வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் உள்ளன. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் இருப்பதால், வேலைவாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. சென்னையின் நுழைவு வாயில் என்று இந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சொல்வது போன்று, முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக, முதலீடுகளுக்கான முதல் முகவரியாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இ்ந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, காஞ்சிபுரம் எம்பி.செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, ஆட்சியர் அருண்ராஜ், கோத்ரெஜ் குழுமத்தின் தலைவர் நாதிர் கோத்ரெஜ், தலைமைச் செயல் அலுவலர் சுதிர் சீதாபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.