சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதகால காத்திருப்புக்குப் பிறகு வரும் மார்ச் 16-ல் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 10 நாள் பயணமாக சென்றனர். இந்தநிலையில், விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பூமிக்கு திரும்ப உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 16-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமாக அவர்கள் பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா கூறியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நாசா விண்வெளி வீர்ர நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகிய இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அப்போது, இந்த விண்கலத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை அழைத்து வர ஏதுவாக இரண்டு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது. இந்த விண்கலம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த விண்கலம் நான்கு பேருடன் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) பூமிக்கு திரும்ப உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.