இருளின் பிடியில் குமரி – கூவக்காடு மலை கிராம மக்கள்!

நாகர்கோவில்: கூவக்காடு மலைகிராம மக்கள் இருள்சூழ்ந்த பாதையில் ஆபத்தான பயணிம் மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஒன்றியம் சுருளோடு ஊராட்சிக்கு உட்பட்ட கூவக்காடு மலை கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தடிக்காரன்கோணம் – கீரிப்பாறை சாலையில் உள்ள கொட்டப்பாறை பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ வனப்பகுதி வழியாக வரவேண்டிய நிலை உள்ளது.

குறிப்பிட்ட சாலைப் பகுதியின் இருபுறமும் அடர்ந்த மரங்கள் உள்ளன. இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டமும் உள்ளது. இச்சாலையில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இச்சாலை வழியாக செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், கூலிவேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கடைகளுக்கு செல்லும் பெண்கள், மருத்துவ சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளிகள் குறிப்பிட்ட இந்தச் சாலையில் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் நடந்தே செல்ல வேண்டியிருப்பதால் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.

மின்விளக்குகள் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், வனவிலங்குகளால் தாக்குதல்களை எதிர்நோக்கி உள்ளதாலும் குறிப்பிட்ட பகுதியில் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என மலைகிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வனவிலங்குகளின் நடமாட்டத்துக்கு மத்தியில், பாதுகாப்பற்ற சூழலில் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் கொட்டப்பாறை பகுதியில் தாமதமின்றி மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூவக்காடு மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.