கவாஸ்கர் தனது நாவை கட்டுப்படுத்த வேண்டும் – பாக்.முன்னாள் கேப்டன் பதிலடி

கராச்சி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் அந்த அணியை அந்நாட்டின் பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். மேலும் நடப்பு தொடரில் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் மோசமான தோல்வியை தழுவியது. இதனால் தற்போதைய பாகிஸ்தான் அணியை இந்திய பி அணியே எளிதில் தோற்கடிக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கவாஸ்கர் பாகிஸ்தானை பற்றி இவ்வாறு பேசாமல் நாக்கை அடக்கி வைக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது. அவர்கள் நன்றாக விளையாடினார்கள். ஆனால் மிஸ்டர் கவாஸ்கர் புள்ளி விவரங்களை பார்க்க வேண்டும். ஒருமுறை அவர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதில் இருந்து தப்புவதற்காக ஷார்ஜாவுக்கு பறந்தார். அவர் எங்களை விட வயதானவர் சீனியர். நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். ஆனால் அவர் எங்களுடைய நாட்டை பற்றி இவ்வாறு பேசக்கூடாது.

உங்களது அணியை தேவையான அளவுக்கு பாராட்டுங்கள். ஆனால் மற்ற அணிகளை இவ்வாறு பேசுவது நல்லதல்ல. கவாஸ்கரை புள்ளி விவரங்களை பார்க்க சொல்லுங்கள். அவருக்கு பாகிஸ்தான் எங்கே இருக்கிறது என்று தெரியும். நான் அவருடைய கருத்தால் ஆழமான காயத்தை சந்தித்தேன். அவர் சிறந்த மரியாதைக்குரிய கிரிக்கெட்டர். ஆனால் இது போன்ற கருத்துகளை தெரிவிப்பதால் அவர் தனது மதிப்பை குறைத்துக் கொள்கிறார். அவர் தன்னுடைய நாவை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.