காஷ்மீர் சுற்றுலாதலமான குல்மார்க்கில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு குறித்து விசாரணை நடத்த முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான குல்மார்க்கில் தற்போது பழிப்பொழிவு அதிகரித்து உள்ளது. பனிசூழ்ந்த குல்மார்க் மலைப்பகுதியில் திறந்தவெளியில் கடந்த 8-ம் தேதி ஆடை அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆடை வடிவமைப்பாளர்கள் ஷிவம், நரேஷ் ஆகியோரின் ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னணி மாடல்கள் பங்கேற்று ஆடைகளை அறிமுகம் செய்தனர்.
இதுதொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று பிரச்சினை எழுப்பப்பட்டது. புனித ரமலான் மாதத்தில் கவர்ச்சிகரமான உடையில் ஆடை அணிவகுப்பு நடத்தப்பட்டிருப்பது குறித்து பெரும்பாலான எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் அவாமி இத்தேஹாத் எம்எல்ஏ குர்ஷஇத் அகமது ஷேக் கூறும்போது, “ரமலான் காலத்தில் இதுபோன்ற ஆடை அணிவகுப்பை நடத்தியது வெட்கக்கேடானது. இது காஷ்மீர் கலாச்சாரம் மீதான தாக்குதல். சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ தன்வீர் சாதிக் கூறும்போது, “ஜம்மு-காஷ்மீர் சூஃபி துறவிகளின் இடம். இந்த மண்ணில் அரைகுறை ஆடையில் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது” என்று தெரிவித்தார். இறுதியில் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:
குல்மார்க்கில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு தனியார் நிகழ்ச்சி. இதில் அரசுக்கு எந்த தொடர்பும் கிடையாது. எனினும் இந்த ஆடை அணிவகுப்பு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காஷ்மீரின் கதுவா மாவட்டம், பிலாவர் பகுதியில் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது மிகுந்த கவலையளிக்கிறது. இதுதொடர்பான தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.