கிண்டல் செய்த காங்கிரஸுக்கு பேட்டால் பதில் சொன்ன ரோஹித்: சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரோஹித்தை கிண்டல் செய்த காங்கிரஸ் கட்சிக்கு சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டம் வென்றது. துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

இறுதி ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா பொறுப்புடன் விளையாடி 76 ரன்கள் குவித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதற்கு ரோஹித் சர்மாவை பாராட்டியுள்ள பாஜக நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் அவரைப் புகழ்ந்து வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில் பாஜக கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி நமது கேப்டன் ரோஹித் சர்மாவை கேலி செய்ய முயன்றது. ஆனால் அவர் தனது பேட்டை பயன்படுத்தி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளால் வெறுப்பை பரப்பியவர்களை அமைதிப்படுத்தினார். இவ்வாறு என்று பாஜக தெரிவித்துள்ளது.

மேலும், புஷ்பா திரைப்படத்தின் ஒரு வீடியோவையும் பாஜக இணைத்துள்ளது. “புஷ்பா என்ற பெயரைக் கேட்டதால் நான் ஒரு பூ என்று நினைத்தாயா? நான் நெருப்பு” என்ற பிரபலமான வசனம் இடம்பெற்றுள்ள அந்தத் திரைப்படத்தின் ஒரு காட்சியைக் கொண்ட வீடியோவையும் பாஜக இணைத்து அனைத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த வீடியோவில் ரோஹித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது கிண்டல் செய்து பதிவிட்ட எக்ஸ் பதிவையும் பாஜக இணைத்துள்ளது.

அந்த எக்ஸ் பதிவில் ரோஹித் சர்மாவை, டாக்டரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ஷாமா முகமது கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில், “கேப்டன் ரோஹித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத ரசிகர்களை ஈர்க்க முடியாத கேப்டன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இதையடுத்து ரோஹித் சர்மா குறித்த பதிவை, டாக்டர் ஷாமா முகமது, தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.