டமாஸ்கஸ்: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் அல் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முற்படுவோம் என்று அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
“நாம் ஒரு சிக்கலான சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளோம். முன்னாள் ஆட்சியாளர்கள், அவர்களுக்கு ஆதரவு தரும் அந்நியர்கள் புதிய கலவரத்தை மூட்டிவிட்டுள்ளனர். நமது ஒற்றுமையை, ஸ்திரத்தன்மையைக் குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்படுவார்கள். சாமானியர்களின் ரத்தம் சிந்தக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் மோசமான விளைவுகளை சந்திப்பார்கள். இங்கே எல்லோரும் சட்டத்துக்கு முன் சமம். கலவரப் பின்னணி குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். சிரிய மக்களின் ரத்தம் படிந்த கைகள் கொண்டவர்கள் வெகு விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
தேசிய ஒருமைப்பாட்டை நாம் பேண வேண்டும். உள்நாட்டில் அமைதி வேண்டும். நாம் அனைவரும் அப்போதுதான் நிம்மதியாக வாழ முடியும்.” என நாட்டு மக்களுக்கு அதிபர் அல் சஹாரா அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி வலியுறுத்தியுள்ளார்.
நடந்தது என்ன? சிரியா நாட்டில் நடைபெற்று வந்த அல் ஆசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அல் அசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்று ஆட்சியை நடத்தி வந்தார்.
அதே நேரத்தில், சிரியாவின் முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிரியா அரசைச் சேர்ந்த பாதுகாப்புப் படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுவினர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில்தான் சிரியாவின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள லடாக்கியா, டர்டோஸ் மாகாணங்களில் கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த 2 தினங்களாக கடும் மோதல் நடைபெற்று வந்தது. பாதுகாப்புப் படையினர் குழுமியுள்ள சோதனைச் சாவடிகள், ராணுவ நிலைகள், ரோந்து வாகனங்களை குறிவைத்து, அல் அசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடியை கொடுத்தனர்.
இதுவரை 1,018 பேர் உயிரிழப்பு.. இந்த மோதலில் இதுவரை 1,018 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருவதால் இந்த உயிரிழப்பு அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களில் 745 பேர் பொது மக்கள், 125 பேர் பாதுகாப்புப் படையினர், 148 பேர் கிளர்ச்சியாளர்கள் என தெரியவந்துள்ளது.
மோதல் நடைபெறும் பகுதிகளில் கூடுதல் படைகளை சிரியா அரசு அனுப்பி வைத்துள்ளது. அந்தப் பகுதியில் மின்சாரம், குடிநீர் சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. லடாக்கியா பகுதியில் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள கிராமங்களில் புகுந்த கிளர்ச்சியாளர்கள் கடைகளை சூறையாடி தீவைத்து விட்டுத் தப்பியதாகவும் தகவல் வெளியானது.
குறிப்பாக, லடாக்கியா நகர தெருக்களில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து வந்து சித்ரவதை செய்ததாகவும் தகவல் வெளியானது. பனியாஸ் பகுதிகளில் இந்தக் கொடுமை நடந்துள்ளது. நகர வீதிகளில் நிர்வாணமாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் ஆங்காங்கே கிடப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அந்த சடலங்களை உறவினர்கள் எடுப்பதற்காக வருவதைத் தடுக்கும் வகையில் கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியுடன் அங்கு காவலுக்கு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.