நாடாளுமன்றத்தில் திமுகவினரை பார்த்து கேள்வி எழுப்பினால் தமிழக மக்களை மத்திய கல்வி அமைச்சர் அவமானப்படுத்துவதாக முதல்வர் மடைமாற்றம் செய்கிறார் என எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர். பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக ஒப்புதல் தெரிவித்து விட்டு, பின்னர் அரசியல் காரணங்களுக்காக யூடர்ன் அடித்ததை நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதான் வெட்டவெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதனால், முதல்வர் ஸ்டாலின் தற்போது திசைதிருப்பும் அரசியலை கையில் எடுத்துள்ளார். திமுகவினரை பார்த்து கேள்வி எழுப்பினால் தமிழக மக்களை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவமானப்படுத்துவதாக மடைமாற்றம் செய்கிறார்.
பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தப்போவதில்லை எனக் கூறி விட்டு செயல்படுத்தாத திட்டத்திற்கு முதல்வர் நிதி கோருவது ஏன்? மும்மொழிக்கொள்கையை இந்தி திணிக்கப்படுவதாக கூறி திமுகவினர் செய்யும் வஞ்சக அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. இந்தி பூச்சாண்டி காட்டி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: திமுகவினர் நேர்மையற்ற நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார். மக்களின் எண்ணங்களுக்கு மட்டும் மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா? யார் அந்த சூப்பர் முதல்வர்? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். முதல்வர் ஸ்டாலின் இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற உண்மையை முதல்வர் ஸ்டாலினால் மறுக்க முடியுமா? அப்படி என்றால், எத்தனை அமைச்சர்களின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்? கனிமொழி சொல்வதை போல தமிழகத்தில் கொள்கை இருமொழிக் கொள்கை என்றால், அதுதான் ஒட்டு மொத்த தமிழகத்தின் கொள்கையா? அப்படி என்றால் தனியார் பள்ளிகளின் மூன்றுமொழி கற்பிக்கப்படவில்லை என உறுதியாக கூற முடியுமா? மத்திய அமைச்சர் மன்னர் போல பேசவில்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் மன்னர்களாக இருக்க கூடாது என்பதற்காக தான் பேசுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.