புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. வக்பு வாரிய திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மும்மொழி கொள்கை, மக்களவை தொகுதி மறுவரையறை, மணிப்பூர் கலவரம் உட்பட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியது.
இந்த சூழலில். பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த கூட்டத் தொடரின்போது, குடியேற்றம் – வெளிநாட்டினர் சட்ட மசோதா, வங்கி திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா ஆகியவற்றை நிறைவேற்றவும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று தெரிகிறது. இதற்கிடையே, மும்மொழி கொள்கை, மக்களவை தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்ட நிலையில், இதுபற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தும் என்று கூறப்படுகிறது.
வெவ்வேறு மாநிலங்களில் வாக்காளர்களுக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்பட்ட விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக எழுப்பி வருகிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்புவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது அழுத்தம் காரணமாக அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைக்க இந்திய அரசு முன்வந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க அரசின் வரி விதிப்பு விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்ப திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள், கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் என்று தெரிகிறது.
மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்று தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இன்று தொடங்கும் 2-ம் கட்ட கூட்டத் தொடர் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரை சுமுகமாக நடத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீர்மானம் கொண்டு வருவார். மணிப்பூருக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.