கீவ்,
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இருந்தபோது அவர் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வந்தார்.இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார்.
அதே வேளையில் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ மற்றும் நிதியுதவிக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்கா எடுக்க அனுமதிக்க வேண்டுமென டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த உக்ரைன் பின்னர் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 2 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார்.
அங்கு அவர் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டிரம்ப், துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஜெலன்ஸ்கியை டிரம்ப் கடுமையான வார்த்தைகளால் வசைபாடினார். இதனால் கோபமடைந்த ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓவல் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் கனிம வள ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போனது. இந்த நிலையில் உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்தநிலையில், கனிமவள ஒப்பந்தம் தொடர்பாகவும், ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த வாரம் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.