மியான்மர் ஆன்லைன் மோசடி மையங்களில் வேலை செய்த 300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக நேற்று தாயகம் திரும்பினர்.
இந்தியாவில் ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடிகளுக்கு பெரும்பாலும் மியான்மரில் இருந்து நடத்தப்பட்டு வரும் சட்டவிரோதமான மையங்களே முக்கிய காரணம் என்பது புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனை நடத்துவபர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.
இதையடுத்து, அந்த நாட்டில் சட்டவிரோதமாக செயல்படும் மோசடி மையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், பணிபுரிந்த 12-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 7,000 பணியாளர்களும் மீட்கப்பட்டனர். அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி இவர்களை சட்டவிரோத கும்பல் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட பணியாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த 266 ஆண்கள் மற்றும் 17 பெண்களும் அடங்குவர். மியான்மர் தாய்லாந்து எல்லையில் சிக்கித்தவித்த அவர்களை மீட்டுக் கொண்டுவர 7 பேருந்துகளையும், அவர்களின் உடமைகளை கொண்டு வர கூடுதலாக 3 பேருந்துகளையும் இந்திய அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். தாய்லாந்தின் மே சோட் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து இந்தியாவின் சி-17 போக்குவரத்து விமானம் மூலம் நேற்று தாயகம் திரும்பினர். அடுத்த சில நாட்களில் மேலும். 257 பேரை அங்கிருந்து அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மீட்கப்பட்ட சீனாவைச் சேர்ந்த 2,000 பேரை குற்றவாளிகளாக சந்தேகித்து கைவிலங்கிட்டு அவர்களை அந்நாட்டு அரசு விசாரணை வளையத்தில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.