சமீபத்தில் வெளி வந்த சாவா என்ற இந்தி படம் சத்ரபதி சிவாஜி மகன் சத்ரபதி சாம்பாஜியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. சத்ரபதி சாம்பாஜியை மொகலாய மன்னன் ஒளரங்கசீப் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் ஒளரங்கசீப் தனது கடைசி காலத்தில் மகாராஷ்டிராவில் தான் வாழ்ந்து மறைந்தார். அவரது கல்லறை ஒளரங்காபாத் எனப்படும் சாம்பாஜி நகரில் இருக்கிறது. சத்ரபதி சாம்பாஜியை படுகொலை செய்த ஒளரங்கசீப் கல்லறை மகாராஷ்டிராவில் இருக்கக் கூடாது என்றும் , அதனை அப்புறப்படுத்தவேண்டும் என்றும் பா.ஜ.க எம்.பி. உதயன்ராஜே போஸ்லே கோரிக்கை விடுத்திருந்தார். உதயன் ராஜே போஸ்லே சத்ரபதி சிவாஜி மகாராஜாராவின் வாரிசாக கருதப்படுகிறார்.

சமீபத்தில் மும்பை சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.அபு ஆஸ்மி ஒளரங்கசீப் கொடூரமானவர் கிடையாது என்றும், இந்து கோயில்களை கட்டியவர் என்றும் குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். இதையடுத்து அபு ஆஸ்மி தற்போது நடந்து வரும் மகாராஷ்டிரா சட்டமன்ற கூட்டத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஒளரங்கசீப் கல்லறையை மகாராஷ்டிராவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ”நாங்கள் அனைவரும் ஒளரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனால் அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் சட்டத்திற்கு உட்பட்டு அக்காரியம் நடைபெறவேண்டியது அவசியம்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து ஒளரங்கசீப் கல்லறை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே பா.ஜ.க முன்னாள் எம்.பி நவ்னீத் ரானாவும் ஒளரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மாநில அரசு ஏற்கெனவே ஒளரங்காபாத் என்ற பெயரை சத்ரபதி சாம்பாஜி நகர் என்று மாற்றி இருக்கிறது.