ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு கிராம மக்கள் இந்து மதத்துக்கு மீண்டும் திரும்பியதால் அங்கிருந்த தேவாலயம் கோயிலாக மாறி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் சோட்ல குடா கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். கவுதம் கராசியா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி உள்ளார். இதையடுத்து அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் (சர்ச்) கட்டி பிரார்த்தனை செய்து வந்துள்ளார். இதில் பொதுமக்கள் பங்கேற்று வந்தனர்.
இந்த சூழ்நிலையில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கிராம மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்தனர். இதையடுத்து, தேவாலயத்தை பைரவர் கோயிலாக மாற்றுவது என அவர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர். இதன்படி, தேவாலயத்துக்கு காவி வண்ணம் தீட்டினர். சுவரில் இருந்த சிலுவை குறியீட்டை அழித்துவிட்டு இந்து மத குறியீடுகளை வரைந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த கோயிலில் பைரவர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக, அந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டனர். கிறிஸ்தவ மத போதகராக இருந்த கவுதம், இந்தக் கோயிலின் அர்ச்சகராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கோயில் அர்ச்சகர் கவுதம் கராசியா கூறும்போது, “இனி ஞாயிற்றுக்கிழமை பிராத்தனைக்கு பதில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பைரவருக்கு பூஜை நடத்தப்படும்” என்றார்