சென்னை: நிதி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வனுவாட்டு தேச பிரதமர் ஜோதம் நபத் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணியை உடனடியாக மேற்கொள்ள அந்த நாட்டு குடியுரிமை ஆணையத்திடம் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
“வனுவாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பது என்பது ஒருவிதமான சுதந்திரம் ஆகும். ஆனால் அது உரிமை அல்ல. விண்ணப்பதாரர்கள் நியாயமான காரணங்களுக்காக குடியுரிமை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதில் நாடுகடத்தப்படுவதைத் தவிர்க்க முயற்சிப்பது போன்றவை ஏற்கப்படாது” என்று பிரதமர் ஜோதம் நபத் கூறியுள்ளார்.
தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு தேசம் தான் வனுவாட்டு. லலித் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக வெறும் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை வனுவாட்டு இன்டர்போலை தொடர்பு கொண்ட இந்திய தரப்பு அதிகாரிகள், அவருக்கு எதிராக அலர்ட் நோட்டீஸை கொடுக்கச் சொல்லி உள்ளனர். உரிய நீதிமன்ற ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அது ஏற்கப்படவில்லை என தகவல். இந்த நிலையில்தான் வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அந்த நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அவர் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்த போது குற்ற பின்னணிகள் எதுவும் இல்லை என்பது இன்டர்போல் உறுதி செய்திருந்தது.
ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.