போர்ட் விலா:
ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, வானுவாட்டு தீவில் தஞ்சமடைந்த லலித் மோடி, அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருந்தார்.
மற்றொரு பக்கம், லலித் மோடி மீதான மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரம் காட்டி வந்தன. அவருக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் நோட்டீஸ் வெளியிட அமலாக்கத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அந்நாட்டு குடியுரிமை ஆணையத்திற்கு வனுவாட் தீவு நாட்டின் பிரதமர் ஜோதம் நேபத் உத்தரவிட்டுள்ளார்.
வானுவாட்டு தீவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லலித் மோடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. லலித் மோடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.