Rohit Sharma Retirement: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற நிலையில், இந்த ஆண்டு மற்றொரு ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். பரபரப்பான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
மேலும் படிங்க: IND vs NZ Final: சாம்பியன்ஸ் டிராபி பைனல் வரலாற்றில் ரச்சின் – யங் சாதனை!
ரோகித் சர்மா ஓய்வு
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பல அழுத்தங்கள் எழுந்தது.சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பைனல் போட்டி முடிந்த பிறகு அனைத்து விதமான சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரோகித் சர்மா. நான் தற்போது ஓய்வு அறிவிக்கப்போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு மாதத்தில் ரோஹித் சர்மா தனது 38 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 2027 ஒருநாள் உலகக் கோப்பையின் போது அவருக்கு 40 வயது ஆகியிருக்கும்.
பைனல் முடிந்த பின்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசி ரோகித் சர்மா, தற்போது வரை ஓய்வு குறித்து எந்த ஒரு முடிவும் நான் எடுக்கவில்லை. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதனை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். “நான் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. எதிர்காலத்தில் எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன். தற்போது வரை எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை, நடப்பது அப்படியே தொடரும். நிறைய கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இன்னும் பசி இருக்கிறது. எங்கள் அணியில் உள்ள ஐந்து முதல் ஆறு வீரர்கள் அதிகம் துணிச்சலானவர்கள்” என்று ரோஹித் சர்மா கூறினார்.
கேப்டன் இன்னிங்ஸ்
துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து வெற்றிக்கு உதவினார். 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ரோஹித் முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டினார். 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 50க்கும் மேல் ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் இணைந்துள்ளார். சவுரவ் கங்குலி (117 ரன்கள்), சனத் ஜெயசூர்யா (74 ரன்கள்) மற்றும் ஹான்சி குரோன்ஜே (61) ஆகியோருடன் ரோஹித் இணைந்துள்ளார்.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவாரா பும்ரா? வெளியான அதிர்ச்சி தகவல்!