’’இளம் தம்பதிகளை பேரண்ட்ஸ் கூட்டிக்கிட்டு கிளினிக் வர்றாங்கன்னாலே, தம்பதிகளின் பிரச்னைகளோட வீட்டுப் பெரியவங்களோட ஈகோவும் ஒண்ணு சேர்ந்திடுச்சுன்னு அர்த்தம். இந்த மாதிரி சூழல்ல பெரிவங்களை வெளியே இருக்க சொல்லிட்டுதான், தம்பதிகள்ல கிட்ட பேசுவோம். அன்னிக்கும் அதே மாதிரிதான் செஞ்சேன்’’ என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அந்த கேஸ் ஹிஸ்டரிப்பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
“அந்த தம்பதிகளுக்கு கல்யாணமாகி ஒரு மாசம்கூட ஆகலை. பெரியவங்க பார்த்து செஞ்சு வெச்ச திருமணம்தான். கல்யாணத்தன்னிக்கு, ரெண்டு வீட்டாருக்கு இடையில கருத்து வேறுபாடுல ஆரம்பிச்சு சண்டை வரைக்கும் நிகழாத திருமணங்கள் ரொம்ப ரொம்ப குறைச்சல். இவங்க கல்யாணத்தன்னிக்கும் இதே மாதிரி நடந்திருக்கு.
ரெண்டு வீட்டாரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ஏகப்பட்ட புகார்களை சொல்ல, மாப்பிள்ளைக்கு பொண்ணு வீட்டார் மேல தான் தப்புன்னு தோணியிருக்கு. பொண்ணுக்கோ, மாப்பிள்ளை வீட்டார் மேல தான் தப்புன்னு தோணியிருக்கு. ’இவர் என்ன ஃபேமிலியை பேச விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டிருக்காரு’ன்னு பொண்ணுக்கும், ’இவளாவது இவ குடும்பத்தைத் தடுக்கிறாளா பாருன்னு பையனுக்கும் எரிச்சல் வந்திருக்கு.
ஸோ, ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஈர்ப்பு வர்றதுக்கு முன்னாடியே எரிச்சல் வந்திடுச்சு. அப்புறம் சொந்தக்காரங்க சமாதானப்படுத்த, ரெண்டு வீட்டுக்காரங்களும் ‘கல்யாணம்னா நாலு பிரச்னை வரத்தான் செய்யும்’னு கூலாகிட்டாங்க. ஆனா, பொண்ணு – மாப்பிள்ளை மனசுல இது சங்கடமாவே இருந்திருக்கு.

பொண்ணு கல்யாண வாழ்கைக்கு ஃபிட் இல்ல; மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்ல
அன்னிக்கே முதலிரவு வெச்சிருக்காங்க. மனசு முழுக்க எரிச்சல் இருந்ததால பெண்ணால உறவுக்கு இணங்க முடியலை. வெறுப்பான மாப்பிள்ளை தள்ளிப்படுத்திட்டான். இதுவே அடுத்தடுத்த நாள்கள்லேயும் தொடர, கோவத்துல மாப்பிள்ளை விஷயத்தை ஹால்ல போட்டு உடைச்சிட்டான். மறுபடியும் ரெண்டு குடும்பமும் சண்டை போட்டு ’பொண்ணு கல்யாண வாழ்கைக்கு ஃபிட் இல்ல; மாப்பிள்ளைக்கு ஆண்மை இல்லை’ன்னு வார்த்தைகளைக் கொட்ட, யாரோ ஒரு நண்பரோட வழிகாட்டுதாலால என்கிட்ட வந்திருந்தாங்க. வீட்டுப் பெரியவங்களை ரிசப்ஷன்ல இருக்க சொல்லிட்டு, தம்பதி கிட்ட பேச ஆரம்பிச்சேன்.
’முதலிரவுபத்தி எவ்வளவோ கனவுகளோட இருந்தேன் டாக்டர். எதுவுமே நடக்கல. அதான் டென்ஷன்ல வீட்ல சொல்லிட்டேன்னு மாப்பிள்ளை சொன்னார். ’கல்யாணத்தன்னிக்கு அவ்ளோ பெரிய பிரச்னை நடக்குது. இவர் ஒரு வார்த்தைகூட பேசலை. இவரை நம்பி இவர்கூட நான் எப்படி செக்ஸ் வெச்சுக்கிறது; இவரும் இவர் ஃபேமிலியும் இதே மாதிரிதான் இருப்பாங்கன்னா, அந்த வீட்ல நான் எப்படி வாழ முடியும்; அதனாலதான் செக்ஸை அவாய்ட் செஞ்சேன்’னு பொண்ணு ஸ்ட்ராங்கா தன்னோட நியாயத்தை சொன்னாங்க.

நீங்க ரெண்டு பேரும் ஒரு குடும்பம். அதனால, உங்க பிறந்த வீடுகளோட சண்டையை, ஈகோவை உங்க செக்ஸ் லைஃபுக்கு நடுவுல கொண்டு வராதீங்க. முதல்ல, மனைவிக்கு உங்க மேல காதலும் நம்பிக்கையும் வர மாதிரி நடந்துக்கோங்க. அதுக்கு நீங்க ரெண்டு பேரும் நிறைய பேசணும். உடனடியா, எங்கியாவது ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க. ரெண்டு பேருக்கு நடுவுல காதல் வந்தப்பிறகு ஃபோர் பிளே, அப்புறம் செக்ஸுன்னு படிப்படியா போங்கன்னு சில செக்ஸுவல் டிப்ஸ் கொடுத்தேன். முடிஞ்சா தனிக்குடித்தனம் போங்க. அப்போ தான் வீட்டாரோட ஈகோ உங்க தாம்பத்தியத்துக்கு இடையில வராதுன்னு மாப்பிள்ளைக்கு அட்வைஸ் செஞ்சேன்.
அந்தப் பெண்ணிடம், குடும்பத்தினரோட ஈகோவுக்காக உங்க வாழ்க்கையை இழந்துடாதீங்க. உங்க கணவருக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்கன்னு சொல்லி அனுப்பினேன். கொஞ்ச நாள்லேயே சின்னதா ஒரு ட்ரிப், மனைவி வீட்ல ஒரு வாரம் தங்கியிருந்ததுன்னு மனைவியோட மனசை மாத்த கணவர் நிறைய முயற்சி எடுத்திருக்கார். ’ஏங்க பையன் மொத்தமா பொண்டாட்டி வீட்டுப்பக்கமா சாய்ஞ்சுடப்போறான்’கிற பயத்துல, பையன் வீட்டாரும் மருமகள்கிட்ட அனுசரணையா நடக்க ஆரம்பிச்சிருக்காங்க.
இனிமே நம்ம வீட்டுப் பெரியவங்க சண்டை போட்டாலும், அது நம்மோட உறவை பாதிக்காதுங்கிறதை செயல்ல கணவர் காட்ட ஆரம்பிச்சதும், மனைவி மனசு இளக ஆரம்பிச்சிருக்கார். மனைவி கர்ப்பமானதும் சந்தோஷமா தகவல் சொன்னார். அது காதல் கல்யாணமோ, பெற்றோர் பார்த்து வெச்ச கல்யாணமோ, பெரியவங்களோட ஈகோவுக்கு உங்க தாம்பத்தியத்தை பலி கொடுத்திடாதீங்க இளைஞர்களே’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
