புதுடெல்லி: அமெரிக்க பொருள்களுக்கு வரிகளைக் குறைப்பது பற்றி எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்று வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு பொருள்களுக்கான வரிகளைக் குறைக்க இந்தியா சம்மதித்திருப்பதாக சமீபத்தில் கூறியதற்கான பதிலாக பர்த்வாலின் இப்பேச்சு அமைந்துள்ளது.
வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வர்த்தகச் செயலாளர் சுனில் பர்த்வால் திங்கள்கிழமை விளக்கம் அளித்தார். அப்போது வரி குறைப்பு பற்றிய ட்ரம்ப்பின் சமீபத்திய பேச்சு குறித்த கவலையை உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர்.
அப்போது பேசிய வர்த்தக செயலாளர், “இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் ட்ரம்ப்பின் பேச்சு அல்லது ஊடகத்தில் வரும் அறிக்கைகள் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அமெரிக்கவுடனான வர்த்தக வரிகள் குறித்து இந்தியா எந்தவிதமான உறுதிமொழியையும் அளிக்கவில்லை.
இந்தியா சுதந்திரமான வர்த்தகத்தை ஆதரித்தது, தாராளமயமான வர்த்தகத்தை விரும்பியது அதுவே இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். இந்தியா, அதிலும் குறிப்பாக உள்நாட்டு பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் வரிக் குறைப்பு செய்வதில்லை. தேசிய நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக இரு தரப்பு பேச்சுவார்த்தையை இந்தியா விரும்புகிறது.
கனடா மெக்சிகோவைப் பொறுத்த வரை, அமெரிக்காவுடன் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் எல்லை தாண்டிய குடியேற்றம் போன்ற கவலைகள் இருப்பதால் அவர்களின் நிலைமை வேறு. ஒரு வர்த்தக ஒப்பந்தம் பரஸ்பரம் நன்மை அளிக்கும் என்றால் மட்டுமே இந்தியா அதில் கையெழுத்திடும்.” என்று உறுதிபடுத்தினார்.
ட்ரம்ப் கூற்று: கடந்த வாரத்தில் (மார்ச் 7) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், “இந்தியா மிக அதிகளவில் வரி விதிக்கிறது. இதனால் இந்தியாவில் எதையும் விற்க முடியாத சூழல் உள்ளது. இதனால் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரிவிதிப்பு முறை அமலாகிறது. இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய மாற்றமாக இருக்கும். இந்தியா தற்போது வரியை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது. அவர்கள் அதிகம் வரிவிதித்ததை நாம் எடுத்துக் கூறியதே இந்த மாற்றத்துக்கு காரணம்” என்று குறிப்பிட்டிருந்தார்.