திருநெல்வேலி: திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) ஒருநாள் பெய்த சாதாரண மழையின்போது முக்கிய சாலைகளில் தேங்கிய தண்ணீரை வடியவைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்தது பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் அதிருப்தி அடையவைத்தது.
வானிலை மைய எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதையொட்டி அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் நேற்று ஆய்வு கூட்டத்தை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையமும் ஏற்படுத்தப்பட்டது. எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
கனமழை இல்லை: ஆனால், அந்த நம்பிக்கையை குலைக்கும் வகையில் இன்றைய சூழல் காணப்பட்டது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தபடி திருநெல்வேலியில் இன்று பகலில் கனமழை பெய்யவில்லை. மிதமான மழை இடைவெளிவிட்டு அவ்வப்போது பெய்தது. மாலை 4 மணி நிலவரப்படி திருநெல்வேலியில் 9.20 மி.மீ, பாளையங்கோட்டையில் 12 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியிருந்தது. இந்த சாதாரண மழைக்கே மாநகரில் முக்கிய சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், வியாபாரிகளும் அவதியுற நேர்ந்தது.
வாகன ஓட்டிகள் அவதி… – பாளையங்கோட்டை பேருந்து நிலைய பகுதிகள், சமாதானபுரம், திருநெல்வேலி திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பால பகுதி, சந்திப்பு பழைய பேருந்து நிலைய பகுதிகள், திருநெல்வேலி டவுன் ஆர்ச் பகுதி, ரதவீதிகள் என்று முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் பெருமளவுக்கு தண்ணீர் தேங்கியது. இச்சாலைகளை கடக்க வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இன்று காலையிலும், மாலையிலும் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொட்டும் மழையிலும் வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போக்குவரத்து போலீஸார் திணறினர்.
குளம்போல் தேங்கிய தண்ணீர்… – பேருந்து நிறுத்தங்களையொட்டி சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால் சாலையின் நடுவே பேருந்துகளை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டது. தேங்கியிருந்த தண்ணீரை கடந்து சென்று பேருந்துகளில் ஏறுவதற்கு முடியாமல் பயணிகள் திண்டாடினர். பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே திருச்செந்தூர் சாலையில், மழைக் காலங்களில் இந்த அவலம் தொடர்கிறது. திருநெல்வேலி சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் தொடங்கும் பகுதியில் குளம்போல் தேங்கிய தண்ணீரை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் திணறினர்.
மக்கள் அதிருப்தி… – மாநகரில் முக்கிய சந்திப்புகளிலும், சாலைகளிலும் தேங்கிய தண்ணீரை உடனுக்குடன் வடிய வைக்க மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சாலையோரங்களில் மழைநீர் ஓடைகளை தூர்வாரவும், மழைநீர் ஓடைகள் இல்லாத இடங்களில் அவற்றை அமைக்கவும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டது.
இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் மக்கள்படும் துயர் குறைந்தபாடில்லை. சாதாரண மழைக்கே இந்த துயர் என்றால் 2023-ம் ஆண்டு டிசம்பரில் பெய்த அதிகனமழை அளவுக்கு பெய்தால் என்னவாகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வெறுமனே கண் துடைப்புக்கு கூட்டங்களை நடத்திவிட்டு செல்லாமல் களத்தில் உள்ள நிலையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களின் துயரங்களை தடுக்க முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.