டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, எதிரில் தென்பட்ட நபர்களையெல்லாம், அந்த அமைப்பு துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தது. நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. ஓராண்டுக்கு மேலாக நடந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சூழலில், முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். இந்த முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், காசா முனை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை பாலஸ்தீனிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்து வருகிறது. இதன்படி, காசாவில் இருந்து மீதமுள்ள பணய கைதிகள் விடுவிக்கப்படும் சூழல் ஏற்படும்.
இதனுடன், இஸ்ரேல் படைகள் வாபஸ் பெறப்படுவதுடன், நீண்டகால அமைதிக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹமாஸ் அமைப்பிடம், உயிருடன் 24 பணய கைதிகள் உள்ளனர் என்றும் உயிரிழந்த 35 பேரின் உடல்கள் உள்ளன என்றும் நம்பப்படுகிறது.
எனினும், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதனடிப்படையில் இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் விருப்பம் தெரிவித்து, அதனை வலியுறுத்தி வருகிறது. ஆனால், இது நடைபெறாத சூழலில், காசாவுக்கான நிவாரண பொருட்களை நிறுத்தி உள்ளது. இதனால், மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டதுடன், பாலஸ்தீனியர்கள் மீண்டும் உயிரிழக்கும் சூழலும் காணப்படுகிறது. இந்த நிலையில், பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடந்து உள்ளது.