சென்னை: திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தைக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ என பெயரிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திருத்தணியில் நீண்ட காலமாக காமராஜர் பெயரில் காய்கறி சந்தை இயங்கி வந்தது.
இச்சந்தை இடித்து அகற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக சந்தை கட்டப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு சந்தை என பெயர் வைக்க நகராட்சி மன்ற கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
காங்கிரஸ் கோரிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், காமராஜர் பெயரை மாற்றக்கூடாது என முதல்வரிடம் கேட்டுக்கொண்டார். சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ்குமாரும், இதே கோரிக்கையுடன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் அந்த சந்தைக்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
பழைய சந்தை தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்ட கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2023-ம் ஆண்டு ஆக.18-ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டிருந்தது.
அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ என்று பெயரிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.