துபாய்க்கு உலக லெவனை கூட்டி வந்தாலும் இந்தியா வெல்லும் – பாக். முன்னாள் வீரர் பாராட்டு

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.

ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்று விட்டதாக பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்நிலையில் துபாய்க்கு உலக லெவனை கூட்டி சென்றாலும் இந்திய அணி எளிதில் வீழ்த்தி விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர ஷாகீத் அப்ரிடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ” அவர்கள் வெற்றி பெறத் தகுதியானவர்கள். நீங்கள் உங்கள் நாட்டில் கிரிக்கெட்டில் நல்ல முதலீடு செய்யும்போது, அதற்கான பலன்களைப் பெறுவீர்கள். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் தேர்வு அற்புதமானது. ஆம், அவர்கள் தங்கள் அனைத்து போட்டிகளையும் ஒரே இடத்தில் விளையாடியதாலும், இடங்களை மாற்றாததாலும், அவர்களுக்கு நிலைமைகள் தெரியும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அது அவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெரிய காரணம்.

ஆனால் உண்மையான காரணம் அவர்களின் தேர்வுதான். நான் துபாயில் விளையாடியதால் இது எனக்குத் தெரியும், சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு இங்கே மிகவும் முக்கியமானது. அவர்களின் தேர்வு மிகவும் நன்றாக இருந்தது. தொடக்க வீரர்கள் முதல் மிடில் ஆர்டர் வரை, ஆல்ரவுண்டர்கள், உண்மையான சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் வரை இந்திய அணியைப் பார்த்தால் நீங்கள் உலக லெவனை உருவாக்கி, துபாயில் இந்தியாவுக்கு எதிராக விளையாட வைத்தால், இந்தியாதான் வெற்றி பெறும் என்று நான் கூறுவேன்” என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.