கீவ்,
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போரானது 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்தும் உள்ளனர்.
உக்ரைனுக்கு பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆதரவளித்தது. ஆயுதம் மற்றும் நிதியுதவியையும் வழங்கியது. ஆனால், டிரம்ப் தலைமையிலான அரசு உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கி வருகிறது. இதன்படி, உக்ரைனுக்கான ராணுவ உதவியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு சமீபத்தில் நிறுத்தியது.
இந்த சூழலில், உக்ரைனுக்கு அளித்து வந்த புலனாய்வு தகவலையும் நிறுத்துவது என அமெரிக்கா சமீபத்தில் முடிவு செய்துள்ளது. இது ரஷியாவுக்கு சாதக நிலையை ஏற்படுத்தும் என விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கேற்ப டோனெட்ஸ்க், ஒடிசா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதலை தொடுத்தது. இதில் பொதுமக்களில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால், போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை அவசியத்திற்கு உரிய ஒன்றாகி உள்ளது.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானை ஜெட்டா நகரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், உக்ரைன் நாட்டுக்கான நீண்டகால அமைதியை மீட்டு கொண்டு வருவது மற்றும் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டது.
இதுபற்றி எக்ஸ் சமூக ஊடகத்தில் ஜெலன்ஸ்கி வெளியிட்டு உள்ள செய்தியில், அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வரும் இளவரசருக்கும், முக்கிய பங்கு வகிக்கும் சவுதி அரேபியாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
உக்ரைனின் வருங்காலம் பற்றிய நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை கேட்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பதிவிட்டு உள்ளார். இதேபோன்று உக்ரைனின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜெட்டா நகரிலேயே தங்கியுள்ளனர். அவர்கள் அமெரிக்க அதிகாரிகளை இன்று சந்தித்து பேச உள்ளனர்.
சவுதி அரேபிய இளவரசருடனான ஆலோசனையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மற்றும் நம்பத்தகுந்த அமைதியொன்றை ஏற்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் பற்றி விரிவான அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதேபோன்று, கைதிகளை விடுவிப்பது மற்றும் உக்ரைனிய குழந்தைகளை திரும்ப அழைத்து வருவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது என ஜெலன்ஸ்கி கூறினார்.
வருங்காலத்தில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களில் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.