பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தீவிரவாதிகள் செவ்வாய்கிழமை கடத்தினர். இதற்கு பலூச் விடுதலை படை (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பலூச் விடுதலை படை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் இதுவரை 30 பாதுகாப்புப் படை வீரர்களை தாங்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: “ராணுவம், துணை ராணுவம், காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 214 பாகிஸ்தானியர்கள் போர் விதிகளின்படி பலூச் விடுதலை படையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எங்கள் கோரிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டாலோ, இந்த நேரத்தில் அரசு ஏதேனும் ராணுவ நடவடிக்கைக்கு முயன்றாலோ, அனைத்து போர்க் கைதிகளும் கொல்லப்படுவார்கள். ரயில் முற்றிலுமாக அழிக்கப்படும். விளைவுகளுக்கு பாகிஸ்தான் ராணுவமே முழுப் பொறுப்பாகும்.
பலூச் அரசியல் கைதிகள், தேசிய புரட்சியாளர்கள், காணாமல் போனவர்கள் உள்ளிட்டோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு பாகிஸ்தான் அரசுக்கு 48 மணி நேரம் கெடு விதிக்கப்படுகிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது? – 9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ், செவ்வாய்க்கிழமை அன்று பலுசிஸ்தான் மாகாண தலைநகர் க்வெட்டாவில் இருந்து பயணிகளுடன் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெஷாவர் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் திடீரென ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் தடத்தில் இருந்து விலகி உள்ளது. இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். அப்போது, ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தீவிரவாதிகள் பதில் தாக்குதலில் நடத்தியதாகவும் தகவல்.