பிஹாரில் வாடிக்கையாளர்போல நுழைந்து நகைக்கடையில் ரூ.25 கோடி நகை கொள்ளை

பிஹாரின் அர்ரா நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிஹாரின் போஜ்பூர் மாவட்டம், அர்ரா நகரில் பிரபல நகைக்கடை செயல்படுகிறது. இந்த நகைக்கடை நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 10.15 மணிக்கு கடையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது 2 மர்ம நபர்கள் கடைக்கு வந்தனர். வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம், மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறித்து கொண்டனர். பின்னர் 2 மர்ம நபர்களும் கடைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் மேலும் 4 மர்ம நபர்கள் நகைக்கடைக்குள் வந்தனர். அனைவரின் கைகளிலும் கைத்துப்பாக்கிகள் இருந்தன.

நகைக்கடையின் ஷட்டர்களை மூடிய மர்ம நபர்கள், கடையின் ஊழியர்களிடம் இருந்து செல்போன்களை பறித்தனர். பின்னர் அவர்களை தனி அறையில் வைத்து பூட்டினர். சுமார் 22 நிமிடங்கள் கடையின் இரு தளங்களில் இருந்த நகைகளை பெரிய பைகளில் நிரப்பிக் கொண்டு காலை 10.50 மணிக்கு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். நகைக்கடையை கொள்ளையடித்த 6 மர்ம நபர்களும் முகமூடி அணியவில்லை. அவர்களின் முகங்கள் சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தன. சிசிடிவியில் பதிவான கொள்ளையர்களின் புகைப்படங்கள், வீடியோ அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டன.

இந்த சூழலில் பிஹாரின் பதாரா போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் தப்பிச் செல்வது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை போலீஸார், வாகனங்களில் விரட்டி சென்றனர். அப்போது போலீஸாரை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 2 பேர் காயமடைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 பைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் இருந்து ஏராளமான தங்க நகைகள் மீட்கப்பட்டன. தப்பியோடிய 4 பேரை போலீஸார் அதிதீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போஜ்பூர் மாவட்ட எஸ்பி ராஜ் கூறியதாவது: நகைக்கடை கெள்ளை தொடர்பாக சரண் மாவட்டம் திக்வாரா பகுதியை சேர்ந்த விஷால் குப்தா, சோன்பூர் பகுதியை சேர்ந்த குணால் குமார் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளோம். போலீஸார் சுட்டதில் இருவருக்கும் காலில் குண்டு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 10 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நகைக்கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டு உள்ளன. தப்பியோடிய 4 பேரை தீவீரமாக தேடி வருகிறோம். அவர்களை பிடிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட எஸ்பி ராஜ் தெரிவித்துள்ளார்.

நகைக்கடை மேலாளர் குமார் கூறியதாவது: எங்களது கடையில் ரூ.50 கோடி மதிப்புள்ள நகைகள் இருந்தன. இதில் சுமார் ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டு 2 பைகளில் நகைகள் மீட்கப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை.

நகைக்கடை என்பதால் சில பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். ஒரே நேரத்தில் 4 பேரை கடைக்குள் அனுமதிப்பது கிடையாது. இதை கொள்ளையர்கள் முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளனர். முதலில் சாதாரண வாடிக்கையாளர் போன்று 2 பேர் மட்டுமே கடைக்குள் நுழைந்து உள்ளனர். திடீரென மேலும் 4 பேர் கடைக்குள் நுழைந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இவ்வாறு கடை மேலாளர் குமார் தெரிவித்தார்.

நடைக்கடை பெண் ஊழியர் சிம்ரன் கூறும்போது, “கொள்ளையர்கள் எங்களது செல்போனை பறித்துக் கொண்டனர். எங்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர். 6 கொள்ளையர்கள் மட்டுமே கடைக்குள் இருந்தனர். ஆனால் அவரது கூட்டாளிகள் வெளியேயும் மறைந்து இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். போலீஸார் காலதாமதமாகவே கடைக்கு வந்தனர்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.