மாநிலங்களவையில் கார்கேவின் பேச்சுக்கு பாஜக கண்டனம் – மன்னிப்பு கேட்டதால் தணிந்த சர்ச்சை!

புதுடெல்லி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசும்போது பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு எதிராக பாஜக கண்டனம் தெரிவித்ததை அடுத்து அவர் தனது பேச்சுக்காக மன்னிப்புக் கோரினார்.

மாநிலங்களவையில் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமை தாங்கி அவையை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, கல்வி குறித்த விவாதத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங்கை பேச அழைத்தார். எனினும், திக்விஜய் சிங் பேச மறுத்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதலில் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கார்கே ஏற்கெனவே காலையில் பேசியதை ஹரிவன்ஷ் நினைவூட்டினார். அதற்கு கார்கே ஆட்சேபனை தெரிவித்தார். காலையில் தான் பேசியபோது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லாததால் தனது கருத்துகள் முழுமையடையவில்லை என்று கார்கே கூறினார்.

கார்கேவை பேச அழைக்க ஹரிவன்ஷ் தயங்குவதுபோல தோன்றியதால், “இது என்ன சர்வாதிகாரம்! நான் பேச வேண்டும். நான் பேசத் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும், அதைச் செய்வோம்” என்று கூறினார். அவரது இந்தக் கருத்துகள் அவையில் குழப்பத்தை ஏற்படுத்தின.

துணைத் தலைவர் ஹரிவன்ஷுக்கு எதிரான மல்லிகார்ஜுன் கார்கேவின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜே.பி.நட்டா கூறும்போது, “நீண்ட மற்றும் அனுபவம் வாய்ந்தவரும், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தலைமை தாங்கியவருமான தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கார்கே இதுபோன்ற மொழியைப் பயன்படுத்தியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவையின் துணைத் தலைவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையும் மொழியும் நாடாளுமன்றத்திற்குப் புறம்பானது. ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. கார்கே தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

இதையடுத்துப் பேசிய கார்கே, “நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எனது கருத்துகள் மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானதே தவிர, அவைத் தலைவர் பற்றியது அல்ல. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டின் ஒரு பகுதியினரின் (தமிழ்நாடு) சுயமரியாதையைப் புண்படுத்தும் வகையில் பேசுவது ஏற்புடையது அல்ல. அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய நட்டா, “எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டது நல்லது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூத்த தலைவராகவும், இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. இருப்பினும், அரசுக்கு எதிராக அவர் பயன்படுத்திய மொழியும் கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று மக்களவையில் பேசிய பேச்சு, அவையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதாகக் கூறினார். இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் கார்கேவின் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.